9 ஏப்ரல், 2010

ஐ.ம.சு.முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி


ஏழாவது பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் படி) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் வியாழனன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும் நேற்று இரவு வரை 20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன.

திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக ஊர்ஜிதமானதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் அந்தத் தொகுதிகளிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இதற்கான திகதி இன்று வெளியிடப்படவுள்ளது.

இதனாலேயே மேற்படி இரு தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆயினும், அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. 46 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளதுடன் படுதோல்வி அடைந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கிறது.

இதன்படி, ஆளுங்கட்சி 70 வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டத ற்கிணங்க நாட்டு மக்கள் நன்றிக் கடனைச் செலுத்தியுள்ளார்களென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 45 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 21 இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் மாலை 4.30 இற்கு ஆரம்பமானபோதிலும், நேற்றிரவு 10.45 இற்கே முதலாவது தபால் மூல முடிவு வெளியானது. தொகுதி வாரியான முதலாவது முடிவு நேற்று அதிகாலை 01,05 இற்கு வெளியிடப்பட்டது. இதற்கமைய மாத்தறை கம்புறுபிட்டிய தொகுதியில் 18,557 மேலதிக வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியிருந்தது.

நேற்றுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஒரு சில தொகுதிகளைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைவிட ஆகக்குறைந்தது 10 ஆயிரத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக் கிறது.

வெல்லவாய தொகுதியில் 37,880 மேலதிக வாக்குகளை சுதந்திர முன்னணி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் முன்னணி 50,073 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி 12,199 வாக்குகளை மட்டுமே எடுத்துள்ளது. அதேபோன்று தங்காலை தொகுதியில் 29115 வாக்குகளை முன்னணி மேலகதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோன்று பெலியத்த, திஸ்ஸமஹாராமை, மாவத்தகம, கலவான, ஹிரியாலை, முல்கிரிகல, வத்தேகம, வெலிகம, தெனியாய, அக்குரஸ்ஸ, பல்மடுல்ல, அக்மீமன, ஹக்மன, கம்பஹா, தெவிநுவர உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதல் மேலதிக வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும்பார்க்க மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந் துள்ளது.

என்றாலும் கொழும்பு வடக்கு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி 30825 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இங்கு 14,849 மேலதிக வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

தவிரவும் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஆளுந்தரப்பைவிட 50 வீதம் குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.

இதனிடையே கடந்த நாடாளுமன்றத்தில் 39 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள்.

நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி ஜனநாயக தேசிய கூட்டமைப்புக்கு களுத்துறை மாவட்டத்தில் ஒரேயொரு உறுப்பினர் தெரிவாகியுள்ளார். சகல தொகுதிகளிலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. இதனால், சிறையில் வாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும் இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிந்து சென்று ஆளுந்தரப்பில் சிலர் இணைந்தும், தனித்தும் போட்டியிட்டனர்.

இதனால், முன்னாள் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வாய்ப்பை இழந்துள்ளனர். பிந்திய செய்திகளின்படி 15க்கும் குறைவான ஆசனங்களையே தமிழரசுக்கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) பெற்றுள்ளதெனத் தெரியவருகிறது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிய இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட எம். கே. சிவாஜிலிங்கம், ரெலோ சிறிகாந்தா ஆகியோர் படுதோல்வியைத் தழுவியுள்ளனர். மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைக் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.(நாபா) மற்றும் தமிழ் சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றில் போட்டியிட்ட எவரும் கணிசமான வாக்குகளைக்கூடப் பெறத் தவறியுள்ளனர்.

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மூவரும் வெற்றிபெற் றுள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட எந்தவொரு தமிழரும் தெரிவு செய்யப்படவில்லை. பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தமிழர்களுள் இருவர் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்று கண்டியில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வியடைந்துள்ளார். கொழும்பில் அவர் நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

சுயேச்சைக் குழுக்கள் 301 போட்டியிட்ட போதிலும் எந்தவொரு குழுவிலும் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. அனைத்துக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

பொதுவாக இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. இரு சமூகங்களிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக பிரதியமைச்சர்கள் கே. ஏ. பாயிஸ், பெ. இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி முதலானோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்நிலையில், ஏழாவது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. புதிய அமைச்சரவை புத்தாண்டின்போது சத்தியப்பிரமாணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக