9 ஏப்ரல், 2010

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம் ஜனாதிபதி

வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ழர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.

இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்ழர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.

இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.

இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக