9 ஏப்ரல், 2010

அமைதியான தேர்தல்: 55 வீத வாக்களிப்பு


ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக பொலிஸாரும் கண்காணிப்பாளர்களும் தெரிவித்தனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது.

எந்தவொரு மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தேர்தல் கடமைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்னவும் மற்றும் கண்காணிப்பாளர்களும் தினகரனுக்குத் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததுடன் 50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

காலை வேளையில் ஓரளவு சுறுசுறுப்புடன் காணப்பட்ட வாக்களிப்பு நண்பகலுக்குப் பின் சற்று மந்தமடைந்ததுடன் பிற்பகலில் அது சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் குறிப்பிடக் கூடிய முன்னேற்றமெதுவும் காணப்படவில்லை என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாக்களிப்புப் பணிகள் நிறைவடைந்த தையடுத்து பிற்பகல் 4.30 மணியளவில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தேர்தல் வாக்களிப்பின் போதும் வாக்கெண்ணும் பணிகளின் போதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

30 வருடங்களின் பின்னர் நாடளாவிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் மிக அமைதியாக நடைபெற்ற தேர்தல் என இத்தேர்தலைக் குறிப்பிட முடியுமெனவும் குறிப்பிடத்தக்க எவ்வித அசம்பாவிதங்களும் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறவில்லை எனவும் தேர்தல் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 196 பேரை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான நேற்றைய தேர்தல் வாக்களிப்பில் திகாமடுல்ல மாவட்டத் திலேயே 62 வீதவாக்களிப்பு இடம்பெற் றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 வீத வாக்களிப்பும், வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும், யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பும் நேற்று இடம்பெற்று ள்ளன. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும், நுவரெலியா மாவட்டத்தில் 45 வீதமும், மன்னார் மாவட்டத்தில் 55 வீதமும் பதுளை மாவட்டத்தில் 50 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் நேற்று காலநிலை மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட போதும் மக்கள் உற்சாகமாக வாக்களித்தாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக நான்கு மணி நேர விடுமுறையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

ஏழாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதுடன் இவற்றின் சார்பில் 7620 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர். ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 11,875 வாக்களிப்பு நிலையங்களில் நேற்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதுடன் இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக் கைகளில் 22,000 உள்ளூர் கண்காணி ப்பாளர்களுடன் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் ஈடு பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கை களில் 58,800 பொலிஸாருடன் இரா ணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர்.

அதேவேளை, இம்முறை தேர்தல் கடமைகளில் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக