11 ஏப்ரல், 2010

மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்ற மக்களிடமிருந்து முழுமையான ஆணை




அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஐ. ம. சு. மு. தலைவர்கள் உறுதி


மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றவும் அரசியல், சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தவும் மக்கள் முழுமையான ஆணையை வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

மஹிந்த சிந்தனையை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகளும் ஏனைய தரப்பினரும் தமது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைத்த மக்கள் இம்முறை தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்து 2/3 பெரும்பான்மை பலத்தை தந்துள்ளனர். மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை முழுமையாக செயற்படுத்து வதற்காக மக்கள் தமது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும். அதற்காக நாம் அர்ப்பணிப் புடன் செயற்படுவோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐ. ம. சு. முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த் கூறியதாவது,

ஜனாதிபதி எதிர்பார்க்கும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மேற்கொள்வதற்கு பலம்வாய்ந்த பாராளுமன்றத்தை மக்கள் வழங்கியுள்ளனர். 22 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே எமது அரசாங்கத்தின் ஒரே குறிக்கோளாகும். எமக்குப் பெருவெற்றியை வழங்கிய மக்களுக்கும் தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்குப் பங்களித்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையாளர், அரசாங்க ஊழியர்கள், பொலிஸார் உட்பட சகல தரப்பினருக்கும் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறியதாவது, தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றது, இதனை ஐ. தே. க. தலைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களிப்பு வீதம் குறைந்திருப்பது குறித்து வழமை போல் எதிர்க்கட்சிகள் கருத்துக் கூறத் தொடங்கியுள்ளனர்.

அமைதியான சூழல் காணப்படும் நிலையில் வாக்களிப்பு வீதம் குறைவது வழமையாகும். தமது தோல்வியை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் கூறும் காரணங்கள் மூலம் அவர்களது வங்குரோத்து நிலை தெளிவாகிறது.

2 மாதங்களுக்கு முன் 57 சதவீதம் வாக்ககளை பெற்ற நாம் தற்பொழுது 60 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எதிர்க்கட்சி வாக்குகள் 41 சதவீதத்தில் இருந்து 37 ஆக குறைந்துள்ளன.

பொன்சேகாவின் உதவியுடன் ஜே. வி. பி. ஐந்து ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஆறாவதாகவும் இறுதியாகவும் நடைபெற்ற விகிதாசார முறையிலான பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று முக்கியமான மிகப் பெரும் வெற்றியை ஐ. ம. சு. முன்னணி ஈட்டியிருக்கிறது. நாடு சுபீட்சமாக இருப்பதனாலோ பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருப்பதனாலோ மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே பெருமளவு மக்கள் எமக்கு வாக்களித்தனர்.

மக்களின் அபிலாஷைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம் என்றார். மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவர் தினேஷ் குணவர்தன கூறியதாவது,

அரசியலில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தேர்தல் சமயத்தில் நாட்டுக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு மட்டத்தில் சதிகள் முன்னெடுக்கப்பட்டன.

சில கட்சிகள் அவற்றின் கையாட்களாக செயற்பட்டன. இனியாவது அவர்கள் தாய் நாட்டிற்கு விசுவாசமாக செயற்படுமாறு கோருகிறோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கூறியதாவது,

1977 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக நாடு பூராவும் அச்சமின்றி சுதந்திரமாகத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு இனங்களையும் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்முறை பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தந்துள்ள இந்த ஆணையை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சியினர் தமது கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்ற வேண்டியிருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக