11 ஏப்ரல், 2010

தமிழர் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச தயார்-சுரேஷ் பிரேமசந்திரன்



தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவிருக்கிறோம். அதற்கான ஆணையை எமக்குத் தேர்தல் மூலம் மக்கள் தந்துள்ளார்கள். ஆகவே, அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாம் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை ஏலவே வெளியிட்டுள்ளோம். அதற்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள். இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எம்முடன் பேச முன்வர வேண்டும்.

நடைபெற்று முடிந்த தேர்தலை ஜனநாயக ரீதியான தேர்தலாக நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யாழ்ப்பாணத்தில் கடந்த 7 ஆம் திகதிவரை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒலிபெருக்கிகளைப் பாவித்து தொடர்ந்தும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். இது தேர்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்று கூட தெரிந்திருந்தும் அங்கிருந்த இராணுவமோ பொலிஸாரோ அதனைக் கண்டுகொள்ளவில்லை. 5 ஆம் திகதிக்குப் பின்னர் சனசமூக நிலையமொன்றில் தேர்தல் பிரசாரக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதுபோன்று பல விடயங்களைக் கூற முடியும்.

இதுதவிர, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கூட அந்த மக்களின் வாக்களிக்கும் உரிமை முற்றாக மறுதலிக்கப்பட்டது. அந்த மக்கள் முகாம்களில் இருந்து கிளிநொச்சிக்கு வாக்களிக்கக் கொண்டு செல்லப்பட்டு வாக்களிக்க முடியாத நிலையில் திரும்பவும் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் போன்ற குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வாக்களிக்கும் மக்களுக்கான இடம் வவுனியாவாக இருந்தது. அவர்கள் ஐம்பது மைல் தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் எங்கு போய் வாக்களிப்பது, தங்களது வாக்குச்சாவடிகள் எங்கு இருக்கின்றன, வாக்காளர் அட்டைகள் எங்கு சென்று பெற்றுக் கொள்வது போன்ற பிரச்சினைகளை அந்த மக்கள் முகம் கொண்டனர். இவை காரணமாக அந்த மக்களின் வாக்களிப்பு முழுமையாக இடம்பெறவில்லை. இவற்றினை ஒரு திட்டமிடப்பட்ட விடயமாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த விடயங்கள் குறித்து நாம் ஏற்கெனவே தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பதாக எமக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. இவற்றினையெல்லாம் பார்க்கும் போது இதனை எவ்வாறு ஜனநாயக ரீதியான தேர்தலாகக் கணிக்க முடியும்? மக்களின் வாக்களிக்கும் உரிமை முற்றாக மறுக்கப்பட்டது. இதனை வன்னி மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே நான் கருதுகிறேன்.

மேலும், யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள், வன்னியில் கெடுபிடிகள் இவைகளுக்கு மத்தியில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை வென்றுள்ளது. இது ஒரு பெருமைப்படக்கூடிய விடயம். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது. தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அரசாங்கமும் கூட இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை அரசு காண வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்ற விடயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து பேச்சு நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான ஆணையை மக்கள் தந்துள்ளார்கள். அரசாங்கம் அதற்கு முன்வர வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் தமது உரிமைகளுக்காகப் பல இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதனை அரச தரப்பு புரிந்துகொள்ள வேண்டும். இதனடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கு அவர்கள் வர வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக் கும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுவோம். அவ் வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக் காது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக