2 மார்ச், 2010

சிப்பந்திகளுக்கு சம்பளம் வழங்காததால்
வெளிநாட்டு கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சம்பளத்தை ஒப்பந்தப்படி வழங்காததால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு கப்பலை சிறை பிடித்து வைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கப்பல் மாலுமிகள் கொலாக் பகுலோ, பாலஜின் ஆகியோர் சார்பில் அவர்களது பவர் ஏஜெண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

`எம்.வி.லேடி அலா' கப்பல்

`எம்.வி.லேடி அலா' என்ற கப்பல் கம்போர்டியா நாட்டை சேர்ந்ததாகும். இது 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த கப்பலை லண்டன் நிறுவனம் ஒன்று சொந்தமாக வைத்துள்ளது. நாங்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த கப்பல் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலாகும்.

இந்த கப்பலில் பணியாற்றுவதற்காக கப்பல் நிர்வாகம் மற்றும் எங்களிடையே 8.7.2009 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து நாங்கள் உள்பட 16 கப்பல் சிப்பந்திகள் அதில் பயணம் செய்தோம்.

சம்பளம் வழங்கவில்லை

சைனா களிமண்ணை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கடந்த பிப்ரவரி 11-ந் தேதி வந்து சேர்ந்தோம். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள பணத்தை கப்பல் நிர்வாகத்தினர் தரவில்லை. இந்த பணத்தின் மூலம்தான் எங்கள் குடும்பம் காப்பாற்றப்பட்டு வருகிறது. குடும்பத்தினருக்கு நாங்கள் பணம் அனுப்பாததால் அவர்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். பல மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

இந்த நிலையில், கப்பல் சரிவர பராமரிக்கப்படாததால் கடலில் பயணம் செய்யும் அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கப்பலில் உள்ள எந்திரங்கள் பழுதாகிவிட்டன. கப்பல் சிப்பந்திகள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கப்பல் சிப்பந்திகளுக்கு தகுந்த உணவை கப்பல் உரிமையாளர் தரவேண்டும். அதுபோல், கப்பலை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். இவற்றுக்கான தொகைகளை கப்பல் நிர்வாகம் ஒதுக்கவில்லை. எனவே, எங்களுக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி தொகையான ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 694- 24 சதவீத ஆண்டு வட்டியோடு சேர்த்து தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிறைபிடிப்பு

இந்த மனுவை நீதிபதி ராஜசூரியா விசாரித்தார். அவர், நாகப்பட்டினம் துறைமுக நிர்வாகத்துக்கு பிறப்பித்த உத்தரவில், `மனுதாரர் குறிப்பிட்டுள்ள `எம்.வி.லேடி அலா' கப்பலை எந்த நிலமையில் இருக்கிறதோ, அதே நிலையில் அதை சிறைபிடிக்க வேண்டும். பாதுகாப்பாக அவற்றை சிறைபிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை அந்த கப்பல் நாகப்பட்டினம் துறைமுக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக