24 பிப்ரவரி, 2010

ஆப்கானிஸ்தானில்
பின்லேடன் தப்பிப்பதற்கு உதவிய பழங்குடி இன தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி பின்லேடன், அமெரிக்க தாக்குதலின்போது தப்பித்து ஓடுவதற்கு பழங்குடி இனத்தலைவர் ஒருவர் உதவி செய்தார். அவர் பெயர் முகமது ஹாஜி சமான். இவர் 1990-களில் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்தின்போது சக்தி வாய்ந்த போராளி தலைவராக இருந்தார்.

2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியபோது, அல்கொய்தா தலைவர் பின்லேடன் டோரா போரா மலைப்பகுதியில் இருந்து தப்பிப்பதற்கு உதவியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பெஷாவர் நகரில் தலைமறைவாக இருந்து விட்டு சமீபத்தில் தான் ஆப்கானிஸ்தான் திரும்பினார்.

இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கார்கர் மாநிலத்தில் கோகியானி மாவட்டத்தில் அகதிகள் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் புகுந்த தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் சமான் உள்பட 15 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக