28 பிப்ரவரி, 2010

ரணிலின் பாதுகாப்புக்கு பஸ் வண்டிவழங்கும் தீர்மானம் திடீர் ரத்து


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக பஸ் வண்டியொன்றை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் நேற்று முன்தினமிரவு (வெள்ளிக்கிழமை இரவு) திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டிருந்த இரு கெப் வாகனங்களும் குண்டு துளைக்காத கார் ஒன்றும் பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை இதுவரையும் திருத்தியமைக்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடவேண்டியுள்ள இன்றைய நிலலயில் தமது பாதுகாப்பு ஊழியர்களுக்காக பஸ் வண்டியொன்றையேனும் தருமாறு ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபரைக் கேட்டிருந்தார்..

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அதற்கான அனுமதியும் பிரதிப்பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது..

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாடு காரணமாக அவர் நாடாளுமன்றப் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்வதில் பாதுகாப்புத் தொடர்பான சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப்பீட வட்டாரங்கள் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாவனைக்கென தற்போது இரு வாகனங்களே உள்ளன. அவற்றில் ஒன்று அவரது தனிப்பட்ட வாகனம், மற்றையது உத்தியோகபூர்வ வாகனமாகும்..

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) பாதுகாப்பிலும் பாரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு அதற்குப் பதிலாக குறைந்த எண்ணிக்கையிலான விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், தனது பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டார்..

இதுவரை தனக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக குறைந்த எண்ணிக்கையினரைக் கொண்ட விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். உங்களைச் சுற்றியுள்ள அச்சுறுத்தல், தேர்தல் பிரசாரப் பணிகள் இவற் றுக்கு மத்தியில் திடீரென உங்களது பாதுகாப் புக் குறைக்கப்பட்டுள்ளதே இது பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று கேட்டபோது. ""இதுதான் இலங்கை (ஸ்ரீலங்கா) இதனை நீங்கள் புரிந்து கொள்ளுங் கள்'' என்றார்..

இது இவ்வாறிருக்க, அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பை நிறுத்தி விட்டு அதற்குப் பதிலாக விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ வீரர்களை அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு நியமிப்பதன் காரணமாக அவர்களும் அரசியலில் ஈடுபடும் சாத்தியம் காணப்படுவதாகவும் அதனைத் தடுக்கும் வகையிலேயே இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக