28 பிப்ரவரி, 2010



இயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்கு வருவதாக வீதிகளில்கதறல்




டோக்கியோ: சமீப காலமாக இயற்கை சீற்றம் மக்களை துரத்தி, துரத்தி கொன்று வருகிறது. நில நடுக்கம், மழை , சுனாமி தாக்குதல் என இந்த வகைகளுக்கு மக்கள் மீது என்ன கோபமோ ? உலகம் அழியும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன் என சிலியில் நில நடுக்கத்தில் உயிர் பிழைத்த பெண் ஒருவர் கூறியுள்ளார். சிலியில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தை அடுத்து இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) ஜப்பான், ஹெய்த்தி, மற்றும் அமெரிக்காவில் உள்ள குறி்ப்பிட்ட தீவுகளில் சுனாமி தாக்குதல் நடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் எப்படி இருக்கும் பாதிப்பு ? : ஜப்பானின் வட கிழக்கு தீவு பகுதிகள், பசிபிக் கடல் பகுதிகள் , மீன்பிடி பகுதிகள் ,முக்கிய சுற்றுலா நகரங்கள் ஆகியன இதில் பாதிப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்த கடல் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கு பெரும் அலை சீற்றம் இருக்கும். எனவே தாழ்வான பகுதி மற்றும் கடலோர பகுதிகள் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் மாற்று இடம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இங்கு கடந்த 1960 ல் நடந்த சுனாமி தாக்குதலில் 140 பேர் பலியாயினர். இதற்கு பின்னர் பெரும் பாதிப்பு இந்நாளில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஜப்பானில் கடந் 15 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டதில்லை என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மதியம் 3 மணி அளவில் ஜப்பானில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. குஜிபோர்ட், ஹனாசகி, நியூமுரோ, ஹொக்கைடோ உள்ளிட்ட தீவு பகுதிளில் கடல் அலைகள் 1. 45 மீட்டர் உயரம் எழுந்தது. தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். சுற்று தீவு பகுதியில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளியேற ‌கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இயற்கை சீற்றம் எங்களை ஒரு பதம் பார்த்து விட்டது: நேற்று ( சனிக்கிழமை) சிலியில் நடந்த நில நடுக்கத்தில் 300 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளளன. இங்கு நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் ஆங்காங்க அனைவரும் வீதிகளில் அலறல் சப்தத்துடன் ஓடியுள்ளனர். ரோட்டில் சென்ற கார்கள் ஆங்காங்கே கட்டட இடிபாடுகளில் சிக்கி லைட்டுகள் மட்டும் எரிந்த நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. இங்கு பாதிப்பில் இருந்து வீதிக்கு வந்த சிலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்; நான் வீட்டில் இருந்தபோது மேலே தொங்கி கொண்டிருந்த விளக்கு, விசிறி பிய்ந்து விழுந்தன. சுவர்கள் கீறி வெடித்தன. இதனையடுத்து நான் வெளியே ஓடினேன். மொத்தத்தில் உலகம் அழிந்து முடிவுக்கு வந்து விட்டது என்பதை மட்டும் உணர முடிந்தது என்றார் பதட்டத்துடன். இந்நாட்டு அதிபர் மிக்சல் பக்லெட் கூறுகையில்; இயற்கை சீற்றம் எங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதியில் நிற்கின்றனர். தேவையான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஹெய்த்தியில் சுனாமி எச்சரிக்கை: கடந்த மாதம் ஹெய்த்தியில் பெரும் பூகம்பம் நிலவியது. இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த சோகம் நீங்கும் முன்பாக இங்கு மழை கால துவங்கி விட்டது. கடந்த ஒரு வாரத்தில் பலத்த மழை பெய்து பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கிடக்கிறது.இங்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் - ஸ்பெயினில் வெள்ளம் : ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயினின் வட� மற்கு பகுதியில் கடும் புயல் , மழை கடந்த 4 நாட்களாக பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இங்கு இயற்கையின் அமைதி திரும்பவில்லை. யாரும் சாலைகளில் நடக்கவோ, கார் ஓட்டவோ வேண்டாம் என உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பு மீட்பு பணியில் 20 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கு கால்ஷீயா, பங்கியூ, காஸ்டிலயா லியான், கண்டாபிரியா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது. இது போன்று போர்ச்சுக்கலிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இங்கு 12 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது.

பாகிஸ்தானில் நில நடுக்கம்: இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் பாகிஸ்தானில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு பகுதிகளில் இந்த தாக்கம் இருந்தது. 6.2 ரிக்டர் அளவாக நடுக்கம் பதிவாகியிருக்கிறது. முக்கிய நகரான இஸ்லாமாபாத்தும் சிறிய அளவில் பாதிக்ப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் இந்த தாக்கம் இருந்துள்ளது. இரு நாடுகளிலும் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

காஷ்மீரில் நடுக்கம்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரி்கடர் 5. 7 பதிவாகியிருக்கிறது. பாதிப்பு குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

ஓபாமா உஷார் : அமெரிக்காவில் முக்கிய தீவுப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் அலட்சியப்படுத்தாமல் மாற்று இடங்களுக்கு செல்லுமாறு அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவத்தினர் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக