28 பிப்ரவரி, 2010

சுவிட்சர்லாந்து நாட்டின் மீது புனிதப்போர்
லிபியா அதிபர் கடாபி அறிவிப்பு


சுவிட்சர்லாந்து நாடு இறை நம்பிக்கை இல்லாத நாடு.அங்கு உள்ள மசூதிகளை எல்லாம் அது இடித்து தள்ளி வருகிறது. எனவே அந்த நாட்டின் மீது புனிதப்போர் நடத்தவேண்டும் என்று லிபியா அதிபர் கடாபி அறிவித்து இருக்கிறார்.

நபிகள் நாயகம் முகமது நபியின் பிறந்த நாளையொட்டி, லிபியா நாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய கடாபி, சுவிட்சர்லாந்துக்கு எதிராக பேசினார். அந்த நாடு இறை நம்பிக்கை இல்லாத நாடு என்றும், அது மசூதிகளை இடித்து தள்ளியது என்றும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

விமானம் தரைஇறங்க விடக்கூடாது

அந்த நாட்டின் மீது புனிதப்போர் நடத்தவேண்டும். சுவிட்சர்லாந்து நாட்டுக்காக உலகத்தின் எந்த ஒரு முலையில் எந்த முஸ்லிம் வேலை செய்தாலும் அவர் முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிரானவர் ஆவார். இறைதூதருக்கும் எதிரானவர்.

முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய நாடுகளில் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் சென்று சுவிட்சர்லாந்து நாட்டு விமானம் எதுவும் தரைஇறங்க விடாமல் தடுக்க வேண்டும்.

அந்த நாட்டுக்கப்பல்கள் எந்த ஒரு துறைமுகத்திலும் நிறுத்த அனுமதிக்க கூடாது. அந்த நாட்டு பொருள்கள் விற்பனையாகாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு கடாபி பேசினார்.

கடாபி மகன் கைது

இதுபற்றி சுவிட்சர்லாந்து நாட்டின் வெளிநாட்டு இலாகா கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.

கடாபியின் மகன் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அந்த ஓட்டல் ஊழியர்களை அடித்து உதைத்தார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

2 நாட்களுக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

லிபியா பதிலடி

இதை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சப்ளை செய்து வந்த பெட்ரோலிய பொருள்களை லிபியா குறைத்து விட்டது. சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த பணத்தை எல்லாம் லிபியா எடுத்து விட்டது. அதோடு லிபியாவில் தங்கி இருந்து தொழில் செய்து வந்த 2 சுவிஸ் நாட்டினரையும் கைது செய்தது.

இது அல்கொய்தாவின் தீவிரவாதம் போன்றது அல்ல. புனிதப்போருக்கும் அல்கொய்தா தீவிரவாதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்று கடாபி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக