26 மே, 2011

ஐ. தே. க. சபையினுள் ஆர்ப்பாட்டம் அமளிதுமளிக்கு மத்தியில் சட்டமூலம் நிறைவேற்றம்






பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு எதிராக ஐ. தே. க. நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் பதாகைகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப் பாட்டத்தை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பீடைக் கொல்லிகளைக் கட்டுப்படுதல் திருத்தச் சட்டமூலம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதுவுமின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் எழுந்துநின்ற போதும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்படி சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்தார். இதற்கான விவாதத்தில் எத்தரப்பினரும் உரையாற்றவில்லை. அதனையடுத்து சபையின் இணக்கப்பாட்டுடன் அந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

க்கிய தேசியக் கட்சியினர் சுமார் ஒரு மணிநேரம் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போதும் சகல நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றன. அதனையடுத்து பிற்பகல் 3.15 மணியளவில் ஐ. தே. க. ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஐ. தே. க. மேற்படி ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பிக்க முன் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா விசேட அறிக்கையொன்றை சபையில் முன்வைக்க முயன்ற போது சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அதற்கான அனுமதியை ஏற்கனவே பெற்று பிறிதொரு நாளில் அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அவரைக் கேட்டுக் கொண்டார். அதனை யடுத்து ஐ. தே. க. வினர் பதாகைகளை ஏந்தி சபையில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக