3 மே, 2011

பின்லாடன் கொலை: பாக் ஆப்கான் கருத்துக்கள்




ஒசாமா பின் லாடன்
பின் லாடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டுள்ளது உலகின் பல பகுதிகளில் வரவேற்கப்பட்டாலும், பாகிஸ்தானுக்குள்ளிருந்து வெளியாகும் கருத்துக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கூடியதாகவே இருக்கிறது.

அப்டாபாத் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பின் லாடன் இருந்தார் என்பது பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு ஒரு தர்மசங்கடமாகவே இருக்கும் என்று இஸ்லாமாபாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

அல் கயீடா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போரில், அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்து போரிடுவது தேவையான ஒன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்"


அமெரிக்கப் படைகள்
அமெரிக்கப் படைகள்
ஆனால் பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவரான இம்ரான் கானும், அந்நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் தலைவருமான சையத் முனாவரும் பின் லாடனின் மரணம் என்பதுடன் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் தனது வெளியுறவு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது எனவும் சையத் முனாவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சிகளும் அந்நாட்டின் இராணுவமும் குறிப்பாக அதன் உளவுப் பிரிவான ஐ எஸ் ஐ ஆகியவற்றிடமிருந்து கருத்துக்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஒசாமா பின் லாடன் இருக்கும் இடம் நம்பகத்தகுந்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இருக்குமாயின், நேரடியாக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவின் கொள்கையின் அடிப்படையின் கீழ் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியப் பிரதமர் இந்த நடவடிக்கையை ஒரு பெரிய வெற்றி என்று மட்டுமே கூறியுள்ளார்.

“பயங்கரவாதம் முடிவுக்கு வரும்"


ஹமீத் கர்சாய்
ஹமீத் கர்சாய்
இதனிடையே பின் லாடன் கொல்லப்பட்டுள்ளது என்பது, பல ஆண்டுகளாக ஆப்கானிய மக்கள் எதிர்கொண்ட பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வரும் என அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஐரோப்பா ஆகியவற்றின் தியாகங்கள் மற்றும் முயற்சிகளை தாம் பாராட்டுகிற அதே வேளை, தமது நாடு காட்டிய பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும் எனவும் கர்சாய் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக