3 மே, 2011

இந்தியா- இலங்கை வரவேற்பு'






அல்கைய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது அல்கைதா மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களுக்கு பெருத்த அடியாக அமையும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றுள்ளார்.

அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, மனித சமுதாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களை ஒழித்துக்கட்ட சர்வதேச சமூகம், குறிப்பாக பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒசாமா கொல்லப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எட்டப்பட்டிருக்கும் வெற்றியின் ஒரு மைல் கல் என்றும் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் கூறும்போது, பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல், பயங்கரவாதக் குழுக்கள் அண்டை நாட்டில் அச்சமின்றி செயல்படும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரடியாகவே பாகிஸ்தானைச் சாடியிருக்கிறார்.

ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானுக்குள் கொல்லப்பட்டிருப்பது, பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது என்ற இந்தியாவின் கவலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது என்று சிதம்பரம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தானின் தொடர்ந்து புகலிடம் கொடுக்கப்படுவதாகப் புகார் கூறியுள்ள சிதம்பரம், அவர்களைப் பற்றிய விவரங்கள் பாகிஸ்தான் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையும் வரவேற்றுள்ளது

பின்லாடன் அவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நியோமல் பெரேரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பின் லாடனை கொல்வதற்கான நடவடிக்கையின் போது சிறு பிள்ளையும் கொலை செய்யப்பட நேர்ந்தமை குறித்து தாம் மனம் வருந்தினாலும், ஒரு பயங்கரவாத தலைவரான அவர் கொலை செய்யப்பட்டமை குறித்து தாம் மகிழ்வதாகவும், இதேபோன்ற மகிழ்ச்சியை இரு வருடங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதும் தாம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக