3 மே, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன்





புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு அரச வங்கிகளினூடாக கடனுதவி வழங்கத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க கூறினார்.

இவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக இந்தக் கடனுதவி வழங்கப்பட்டு வருவதோடு கடனுதவி வழங்க உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 11 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 ஆயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்குத் தொடர்ந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

புனர்வாழ்வு பெற்று வெளியேறுவதற்கு 3 நாட்களுக்கு முன் இவர்களுக்கு விசேட பயிற்சிப்பட்டறை யொன்று நடத்தப்பட்டு பல்வேறுபட்ட அறி வூட்டல்கள், கடனுதவி பெறுவது தொடர்பான வழிகாட்டல்கள் என்பன வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்ட ஆயிரம் பேருக்கு இந்த மாத இறுதியில் வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதோடு 500 பேருக்கு வீடுகட்ட உதவியும் வழங்கப்படும். வீடுகளைக் கட்ட 2 1/2 இலட்சம் ரூபா வழங்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இந்த உதவிகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக