3 மே, 2011

ரொபேர்ட் ஓ பிளேக் - த.தே.கூ. சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று இரவு உடனடியாகவே அவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் இரவு 8 மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்ற இச்சந்திப்பில் இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியாகி உள்ள பின்னணியில் அரசியல் சூழல் என்பன குறித்து நாம் பிளேக்குக்கு விளக்கினோம் என்று, சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாலை தீவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு வந்த பிளேக், இங்கு வந்ததும் முதன் முதலில் கூட்டமைப்புப் பிரதிநிதிகளையே சந்தித்துக் கலந்துரையாடினார். பிளேக் இன்று, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரையும் அரச தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிளேக்கைச் சந்திக்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் யுஎஸ் எய்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பார்வையிடும் நோக்கோடு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூர் தலைவர்களுடனும் அவர் அரசியல் நிலை குறித்துக் கலந்துரையாடக் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக