14 மார்ச், 2011

உணவு, குடிநீரின்றி மக்கள் அவதி 10,000 பேர் வாழ்ந்த கிராமம் முற்றாக அழிவு

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் குடிப்பதற்கு நீர் மற்றும் போதிய உணவுகளின்றி கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில பிரதேசங்களில் மின்சாரம் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களாகிய நிலையில் நூடில்ஸணும், சோறுமே தமக்கு உணவாக வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

சுனாமி அனர்த்தத்தினால் சுமார் ஜப்பானில் 2000 பேர் உயிரிழந்திருப்பதுடன் இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந் துள்ளனர்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக மாற்றப்பட்டு ள்ளதுடன், முகாம்களிலுள்ளவர்களுக்கு தொண்டுப் பணியாளர்கள் குடிநீர் போத்தல்களை வழங்கி வருகின்றனர்.

நேற்றையதினம் 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்கென ஜேர்மனியிலிருந்து பயிற்சியளிக்கப்பட்ட நாய்களும், மீட்புப் பணியாளர்களும் ஜப்பான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

மீட்புப் பணிகளுக்காக ஒரு இலட்சம் ஜப்பான் பாதுகாப்புப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பூமி அதிர்வினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளார்களா என்பது குறித்தும் படையினர் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 2.4 மில்லியன் வீடுகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன், 1.4 மில்லியன் வீடுகளில் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகம் உள்ளிட்ட பல சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தால் அணு உலை முற்றாக வெடித்துச் சிதறும் நிலையிருந்து பாதுகாப்பதற்கு ஜப்பான் அமெரிக்காவிடம் அவசர உதவி கோரியுள்ளது. அதே நேரம் மீட்புப் பணிகளுக்கென இராணுவத்தை அனுப்பி உதவுமாறும் கோரப்பட்டுள்ளது.

பாரிய பூகம்பத்தால் ஆயிரம் பேர்வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் பேர் வாழ்ந்த கிராமமொன்று முற்றாக அலைகளினால் அடிக்கப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்தோரின் நிலவரம் இது வரை தெரியவில்லை யெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சத்துக்கும் மேலானோர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி யுள்ளனர்.

ஜப்பானின் அணு உலை நிலையங்கள் வெடிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இவற்றைப் பாதுகாக்க ஜப்பான் அரசு அமெரிக்காவிடம் அவசர உதவி கோரியுள்ளதுடன் மீட்புப் பணிகளிலும் ஈடுபடும் பொருட்டு இராணுவத்தையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் நஓட்டாகான் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு தேசிய அனர்த்த வாரத்தை பிரகடனம் செய்துள்ளார்.

அணு நிலையங்களிலுள்ள நீரை குளிர வைக்கும் உயர் ரகத் தாங்கிகள் வெடித்ததால் வானளவிற்கு புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக