இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய முதற்கட்ட பேச்சு வார்த்தை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதற்கென இலங்கையின் உயர் மட்டக்குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி புது டில்லி செல்லவுள்ளது.
இக்குழுவில் வெளிநாட்டமைச்சு, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு மற்றும் கடற்படை அதிகாரிகளும் இடம்பெறவுள் ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அடுத்தவாரம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானி கருடனும் பேச்சுவார்த்தையொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் தவறெனக் கூறியுள்ளனர். இது விடயத்தில் நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் முனைப்பாக உள்ளனர்.
இந்த நிலையில் மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணும் வகையில் இரு நாடுகளுக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் போது மேற்படி விடயம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக அது தொடர்பிலான முதலாவது பேச்சுவார்த்தையே எதிர் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதெனவும், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உயர் மட்டக்குழுவொன்று இந்தியா செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக