14 மார்ச், 2011

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு பாதுகாப்புக் கடமையில் 50,000 பொலிஸார்,25,000 படையினர்



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (14) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரசாரக் கூட்டம், மக்கள் சந்திப்பு, உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். அதேவேளை நாளை (15) நள்ளிரவுக்கு முன்னர் வேட்பாளர்களின் காரியாலயங்களும், வீடுகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் அலங்காரங்களும் நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கட்சி செயலாளர்களின் கலந்துரையாடலின் போது இது தொடர்பான இணக்கம் காணப்பட்டதாகவும் எனவே அவ்வாறான அலங்காரங்களை அப்புறப்படுத்தாத காரியாலயங்களில் உள்ள அலங்காரங்களை பொலிஸார் அப்புறப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் இடம் பெறும், எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் பிரதேசத்தில் பொலிஸாருக்கு புறம்பாக இராணுவத்தினரும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக வரவழைக்கப்படுவ ரென்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வேளையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது இறுதிக்கட்ட கூட்டங்களை நடத்திவருகின் றன.

அரச தரப்பு கட்சியினர் இதுவரை மேற்கொண்ட வேலைத்திட்டங்களையும் இனியும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில், எதிரணியினர் தாம் கிராம சபைகளை கைப்பற்றுவதன் மூலம் செய்யக்கூடிய பணிகளை தெரிவித்து மக்களிடம் வாக்குக் கேட்டுவருகின்றனர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுங்கேணி பிரதேச சபைக்குரிய இறுதி பிரசாரக் கூட்டம் கடந்த வெள்ளிமாலையும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபைக்குரிய கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவும் நடைபெற்றன.ஐந்து தமிழ் கட்சிகளுடைய தலைவர்க ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. ஆனந்தசங்கரி, ரி. சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபெற்ற எந்த தரப்பு கூட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லை. குறைந்தளவானவர்களே பங்குகொண்டனர்.

இதேவேளை பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணியொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பொலிஸார், 20 ஆயிரம் முப்படையினர் மற்றும் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் என 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணி 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன் தேர்தல் தினமான எதிர்வரும் 17ஆம் திகதி கலகமடக்கும் படை, நடமாடும் காவல் சேவை, வீதி பாதுகாப்பு சேவை ஆகிய பல சேவைகள் இடம்பெறுவதுடன், தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கென தனியான பிரிவும் சேவையில் ஈடுபடும்.

வாக்கு பெட்டிகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல தனியான பாதுகாப்பு செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியதாக 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 14 பேர் வேட்பாளர்கள் என்றும் தேர்தல் பாதுகாப்புக்கான விசேட பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக