14 மார்ச், 2011

மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த அயராது உழைப்பேன்


மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதே மறைந்த தலைவர் சந்திரசேகரனின் கணவாக இருந்தது. அதனை நிறைவேற்றுவதற்காகவே நான் மலையக மக்கள் முன்னணியில் அரசியல் துறை தலைவராக பொறுப்பேற்றுள்ளேன்.

எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இலட்சியத்தை அடைவதற்காக முழுமையாக என்னை அர்ப்பணித்து பாடுபடுவேன் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தினகரனுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன்று மலையக இளைஞர், யுவதிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

இவர்களை ஒன்றிணைத்து சரியான தலைமைத்துவத்தை வழங்கினால் எமது மலையக இளைஞர், யுவதிகளும் பல சாதனைகளை செய்வார்கள். அத்தோடு இவர்களுக்கான முறையான வேலைத்திட்ட ங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இதனை நாம் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனவே இதனை நடைமுறைப்படுத்த எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற்றுத்தருவதன் மூலம் இந்த இலக்கை இலகுவாக அடைய முடியும். இதற்கு நான் முழு உத்தரவாதம் தருகின்றேன்.

நான் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த பொழுது கட்சி பேதங்களை மறந்து அனைவருக்கும் பொதுவாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அது இந்த மக்களுக்கு நன்றாக தெரியும். என்னை இன்றும் எனது மக்கள் ராதா அண்ணன் என்றுதான் பாசத்தோடு கூப்பிடுகின்றார்கள். அதனை நான் என்றும் விரும்புகின்றேன்.

நான் தேர்தல் காலங்களில் வரும் வழமையான அரசியல்வாதி அல்ல. என்னை சந்திப்பதற்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. நான் பாராளுமன்றத்திற்கு சென்றவுடன் எனது கைத் தொலைபேசி இலக்கத்தை மாற்றவில்லை. இன்றும் பழைய ராதா அண்ணனாகவே இருக்கின்றேன். நான் அரசியலில் எந்த உயரத்திற்கு சென்றாலும் இப்படித்தான் இருப்பேன்.

நான் 1991 ஆம் ஆண்டு நுவரெலிய பிரதேச சபை தலைவராக பொறுப்பேற்ற பொழுது அந்த சபையை இலங்கையின் தலை சிறந்த பிரதேச சபையாக மாற்றி அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் சிறந்த பிரதேச சபைக்கான விருதை பெற்றுக்கொண்டேன். எனவே, என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் நல்ல அனுபவம் இருக்கின்றது. இந்த மக்களுடைய கஷ்டங்களை நன்கு அறிந்தவன், மக்களோடு மக்களாக இருப்பவன்.

இன்னும் சில மாதங்களில் தொழிலாளர் களின் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். எனவே, இந்த மக்களை வேலை நிறுத்தம் என்று காலத்தை வீனடிக்காமல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி வேலைநிறுத்தம் செய்வதாயின் அது சரியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் இந்த மக்களுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில் நாம் அனைத்தையும் மறந்து ஒத்துழைக்க தயாராகவுள்ளோம்.

நான் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தது இந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. இந்த மக்களின் லயன் முறைகள் ஒழிக்கப்பட்டு முழுமையான கல்வி பெற்ற சமூகமாக மாற வேண்டும். பொருளாதார ரீதியில் மற்ற சமூகங்களுக்கு நிகராக நாமும் உயர்வடைய வேண்டும். எனது முழு நம்பிக்கையும் இந்த சமூக முன்னேற்றத்திலேயே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக