28 பிப்ரவரி, 2011

லிபியாவில் மேலும் பதற்றம்; உயிரிழப்புக்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்: பல நகரங்கள் கிளர்ச்சியாளர் வசம்

லிபியாவுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் ஏகமனதாக வாக்களித்திருக்கும் நிலையில் லிபியாவிலி ருந்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 10 ஆயிரம் பேர் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர் களில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் சென்றிருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் பல நகரங்களில் போராட்டம் விஸ்தீரனமடைந்திருக்கும் நிலையில் இதுவரை போராட்டங்கள் நடைபெறாதிருந்த திரிபோலி நகரை நோக்கியும் வன்முறைகள் பரவிவருகின்றன.

தொடரும் வன்முறை களால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் ஆயுதங்களை வழங்கத் தயார் என கடாபி அறிவித்திருக்கும் நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கடாபி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சூழ்நிலை தோன்றியிருப்பதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

எனினும். தமது ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்று லிபியத் தலைவர் கடாபியின் மகன் சய்வ் தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்பொழுது காணப்படும் நிலை சுமூகமாக்கப்பட்டு தமது ஆட்சி நீடிக்குமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, லிபியாவில் தோன்றியிருக்கும் வன்முறைகளைப் கட்டுப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு லிபியாவின் முன்னாள் நீதி அமைச்சர் தலைமையில் பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைக் கைவிட எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கடாபியும் கைவிடாதநிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் லிபிய நகரங்கள் யாவும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு இராணுவத்தினரின் ஆதரவுடன் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள சாவியா நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக