பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு மேலும் தெரிவித்ததாவது:
பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் அரசு இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. முதலில் மாதம் இருதடவைகள் பேச்சுக்கள் நடத்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி நடக்காவிட்டாலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக