இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.
நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், உலக நாடுகளில் சமஷ்டி முறை ஒரு நாட்டை இரண்டாக பிரிப்பதற்கும் பிரிக்காமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி. வலியுறுத்தும் சமஷ்டி முறைமை இலங்கையை துண்டாடுவதற்கல்ல. மாறாக பல்வேறு சமூக, அரசியல் காரணிகளால் பிரிந்துபோயுள்ள தமிழ், சிங்களம் என்ற இரு சமூகத்தை இணைப்பதற்கே ஆகும்.
1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் ஸ்தாபகரும் தலைவருமான றோஹண விஜேவீர இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக நூல் ஒன்றை வெளியிட்டார். அந்நூலில் நேரடியாகவே பெடரல் என்ற சமஷ்டி முறைமை தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஆகாது. ஏனெனில் அத்தீர்வினால் அதிகாரப் பகிர்வு பொதுமக்களிடையே சென்றடையாது என்று தெரிவித்திருந்தார்.
அதே கொள்கையையே ஜே.வி.பி. கடந்த 25 வருடகாலமாக கொண்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களோ அபிவிருத்தியோ கிடைக்கவில்லை. மாறாக வறுமை மேலோங்கி பொதுமக்கள் பாரியளவு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் வருடாந்த சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணமுடியும் என்று கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக