18 மே, 2011

பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீதுஅமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்

பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஹெலிகொப்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேட்டோ படையின் அமெரிக்கப் பிரிவினர், ஆப்கானிஸ்தான் எல்லையான வடக்கு வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் இராணுவ காவலரண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹெலிகொப்டர்கள் குண்டு மழை வீசியதில் இருபாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.

ஹெலிகொப்டர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் தான் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றும் உறுதியாகியுள்ளது.

மிரான்ஷா என்ற இடத்தில் வச்சா பிபி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவ காவலரண்கள் இருந்தாலும் அந்த மாகாணம் முழுக்க முழுக்க பழங்குடியினரின் ஆட்சியில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டு சட்ட திட்டங்கள் செல்லுபடியாவதில்லை. அது ஒரு சுயேச்சையான மாகாணமாகும்.

இதனால் இப்பகுதி, தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக