19 மே, 2011

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கவே இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது அரசாங்கம்

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடி நிற்கின்றது. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க அரசாங்கம் விரைவாக அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதி நியாயம் இல்லை. எனவே உள்நாட்டு மனித உரிமை விசாரணைகளை சர்வதேச ஏற்றுக்கொள்ளாது. –தமிழ் மக்களுக்கு யுத்தம் இல்லாமல் அரசியல் தீர்வை வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தை தவிடுபொடியாக்கியவர்கள் யுத்தம் செய்து அழிவுகளை ஏற்படுத்தி இந்தியாவின் அழுத்தத்திற்காக இன்று அதிகாரப் பரவலாக்கலை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்குவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யதார்த்தமானவையாகவே தோன்றுகின்றன. காரணம் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அவசரகால சட்ட விதிகள் அவசியமில்லை என்றே ஐக்கிய தேசிய கட்சியும் கருதுகின்றது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டியது அவசியமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து நாடு முழுவதும் அமைதி நிலவுகின்ற நிலையில் அவசரகால சட்ட விதிகளை படிப்படியாக குறைத்து முழுமையாக அகற்றிவிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது.

இதேவேளை அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அமைந்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் இதுவரை அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படாமல் உள்ளது.

அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திவருகின்றது. அதாவது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.

வேறு நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்பாக அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும். இந்தியாவுக்கு தமிழகத்திலிருந்து பாரிய அழுத்தங்கள் உள்ளன என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்தியாவின் கருத்துக்கள் யதார்த்தகரமானவையாகவே உள்ளதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடயத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். குற்றம் செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள வலியுறுத்தல் குறித்து ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்; எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பரவலாக்களை வழங்க ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு அரசாங்கத்திற்கு வழியில்லை.

இதனாலேயே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடி நிற்கின்றது. இச் சூழ்நிலையில் இந்தியாவும், அரவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பரவலாக்களை வழங்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டே கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்காக நாம் பாராளுமன்றத்திலும், வெளியேயும் குரல் கொடுத்து வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கூற்றை வெசிமடுக்க வில்லை. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான விமல் வீரவன்ச ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தார்.

தருஷ்மன் பணத்தை வாங்கிக் கொண்டு அறிக்கையை தயாரித்தார் என விமர்சித்தார். ஆனால் இன்று சாமியாரைப் போல் நியூயோர்க் சென்று ஐ.நா. சபையில் தர்ம உபதேசம் செய்துள்ளார். உள்நாட்டில் சிங்கமாக கர்ச்சிக்கும் அரச தரப்பினர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் பூனையாக மாறிவிடுகின்றனர் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக