18 மே, 2011

வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வவுனியா மக்கள் சந்திப்பில் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி.

வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது காலத்தின் அவசியமாகும் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் திங்கள் மாலை வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாங்கள் எந்த இலாபமும் தேடி இங்கு வரவில்லை. மக்களுக்கு உதவி செய்யும் நோக்குட னேயே வந்துள்ளோம்.

இந்த பிரசேத்தின் அரசியல் தலைமைத் துவத்தினை நாங்கள் பகைத்துக்கொள்ளப் போவதில்லை. இணைந்துசெல்லவே விரும்புகின்றோம்.

மலையகத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் வந்து குடியேறியபோது அவர்களை வரவேற்ற இந்த பிரதேச மக்களை நாம் மறந்துவிட முடியாது.

நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. சமாதானம் ஏற்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றது. இத் தருணத்தில் மக்களுடைய தேவைகள் அடையாளம் கண்டு தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம்.

வன்னியில் வாழுகின்ற மலையக மக்களுடைய தேவைகளை இனம்கண்டு தனக்கு அறிவிக்குமாறு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ என்னிடம் கூறியுள்ளார்.

அதேபோல், இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகமும் மக்களுடைய தேவைகளை அடையாளப்படுத்தி தருமாறு கேட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் வவுனியா முன்னாள் நகர சபைத் தலைவர் ஜி. நாதன், முன்னாள் ப.நோ.கூ. சங்கத் தலைவர் எஸ். ஞானப்பிரகாசம், நுவரெலியா பிரதேச சபை தலைவர் எஸ். சதாசிவம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். லோறன்ஸ் நிதி செயலாளரும் மாகாண சபை உறுப்பினருமான எஸ். அரவிந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூம்புகார், சமயபுரம், கணேசபுரம், மணிப்புரம், கூமாங்குளம், கன்னாட்டி, உக்குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துரை யாடலில் பங்குகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக