18 மே, 2011

அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை அவசியம்: இந்தியா வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கமானது அவசரகால சட்டவிதிகளை துரிதமாக நீக்க நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் இடம்பெயர்ந்த மக்களை விரைவாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளை ஈடுசெய்வது அவசியம் என்றும் கோரியுள்ளதுடன் மீள்குடியேற்றம் மற்றும் இதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கப்பாட்டை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு அவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை உறுதியாகவும் துரிதமான முறையிலும் முன்னெடுக்க தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ள அதேவேளை அதிகார பரவலாக்கலுடன் கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் இந்த வகையான நல்லிணக்க சூழலை உருவாக்க பங்களிப்பு செய்வதாக அமையும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உறுதியளித்துள்ளார்.

இரு வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையிலான சந்திப்பு திங்களன்று நடைபெற்றது. இச் சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தமையானது அனைத்து விவகாரங்களையும் அரசியல் ரீதியாக தேசிய நல்லிணக்கப்பாட்டுடனும் இதய சுத்தியுடனும் புரிந்துணர்வுடனும் பரஸ்பரம் சீர்செய்ய ஒரு சரித்திர ரீதியான வாய்ப்பை வழங்கியுள்ளது என இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை சீர் செய்தல் அவசியமானது எனவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா சட்ட ரீதியான நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு இலங்கை உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் மீண்டும் உறுதியளித்துள்ளது.

மீள்குடியேற்றம் நல்லிணக்கம் போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட தடுத்து வைத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றமை தொடர்பான இடைக்கால பரிந்துரைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய சட்டமா அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்ட அனைத்து நிறுவன ஆலோசனை குழு என்பன தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விளக்கியுள்ளார்.

இதேவேளை அவசரகால சட்டவிதிகளை விரைவாக நீக்குதல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை அணுகுதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களை விரைவாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட உண்மையான நல்லிணக்கத்தை உறுதி செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தரப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியேற்றும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பனவற்றை புனரமைத்தல், வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பனவற்றை சீர் செய்தல், தொழில்சார் பயிற்சி நிலையங்களை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை நிறுவுதல், புகையிரத தண்டவாளங்களை மீளமைத்தல், யாழ். துரையப்பா விளையாட்டரங்ககை மீளமைத்தல் உட்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு புகையிரத திட்டங்கள் குறித்து இலங்கை தனது திருப்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பான உடபடிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இரு தரப்பும் இணக்கம் கண்டன. சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பேச்சுக்களை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் உறவை மேம்படுத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் புதுடில்லியில் கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற மீன்பிடி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. எந்தவொரு கட்டத்திலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் பயன்படுத்தப்படுவது நியாயப்படுத்தக்கூடியதல்ல எனவும் அவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்தவேண்டும் எனவும் இணங்கப்பட்டது.

அத்துடன் இந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் கலாசார தொடர்புகளை முன்னேற்றுவது குறித்து இரு தரப்பினரும் உறுதிபூண்டனர். அத்துடன் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை நடத்துவது குறித்தும் இணக்கம் காணப்பட்டது. துறைமுகம் மற்றும் துறைமுகம் சார்ந்த விடயங்களில் இரு தரப்பு முதலீடு மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக