18 மே, 2011

கே.பி. எந்த சட்டத்தின் கீழ் எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்: ஐ.தே.க கேள்வி

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி. எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்படும் குற்றங்கள் என்ன? எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்? அவரை நாடு கடத்துமாறு எந்த நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்டு திகதி குறிப்பிடப்படாத பிரேரணையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க,பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜயலத்ஜயவர்தன, ஆர். யோகராஜன், பாலித தெவரப்பெரும,நிரோஷன் பெரேரா, அப்துல் ஹலீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதுடன் அந்த பிரேரணை ஒழுங்குப்பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கை அரசாங்கம் 2009 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்ததன் பிரகாரம் குமரன் செல்வராசா என்றழைக்கப்படும் கே.பி ஒராண்டுக்கு மேலாக அதன் பாதுகாப்பில் இருக்கின்றார். அவர் ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் பட்டியலில் அவரும் இருக்கின்றார்.

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக பயங்கரவாதச்சட்டம் மற்றும் இந்திய வெடிபொருட் சட்டம் ஆகியவற்றை மீறியமைக்காக அவர் தேடப்படுகின்றார். இலங்கையில் மஹாபோதி மற்றும் புத்தபெருமானின் புனிதத்தந்தம் வைக்கப்பட்டுள்ள கோயில் ஆகியவை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத கொள்வனவாளராகவும் இருந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 19 கப்பல்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்களை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதுமட்டுமன்றி அவ்வியக்கம் அப்பாவி மக்களை கொன்று கொடுமைகளை இழைத்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகின்றது. அத்துடன் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கு சர்வதேச ரீதியில் பணம் சேகரித்தவர் கே,பி என அரசாங்கம் கூறுவதனால் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும்.

அந்த குழு கே.பி எச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் என்னென்ன குற்றங்கள் உள்ளடக்கப்படும், அவருக்கு எதிராக எப்போது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றச்சாட்டுகள் எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அவரை நாட்டை விட்டு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் எந்த நாடுகள் அவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளன. அவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் கே.பி வசமிருந்த குறிப்பாக தங்கம், கப்பல்கள் உள்ளிட்ட புலிகளின் சொத்துக்கள் எங்கே? அவற்றின் கதி என்ன?

நாட்டின் சட்டங்களின் கீழ் கே.பிக்கு எதிராக வழங்குத்தொடராமல் அவரை வைத்திருப்பதில் எந்த உத்தியோகஸ்தர் தேசத்துரோக நடவடிக்கை குற்றவாளிகளாக இருக்கின்றனரா? என்பது தொடர்பில் அக்குழு பரிசீலிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக