28 ஏப்ரல், 2011

ஜனாதிபதி, இராணுவத்தினர் மீது சேறுபூசுவதற்கு அனுமதியோம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. அதேபோன்று அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பான் கீ மூனுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதுடன் கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுபூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நான்கு முக்கிய அமைச்சர்கள் ஒன்றிணைந்து அறிவித்தனர்.

ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு தொடர்பில் உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம். மேலும் நிபுணர் குழு விவகாரம் தற்போது முடிந்துவிட்டது. இதற்கு அப்பால் செயற்பட தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கீ. மூன் கூறிவிட்டார். ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையும் மனித உரிமை பேரவையும் கோரிக்கை விடுத்தால் அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும். ஆனால் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுக்காது என்று நம்புகின்றோம் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, நிமால் சிறிபால டி. சில்வா, டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிடுகையில் : இந்த குழுவின் நியமனம் அவசியமற்றது என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகின்றோம். இந்தக் குழுவானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக பான் கீ. மூன் கூறினார். அந்த வகையில் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தயாரித்து வெளியிட சட்டம் யாப்பு மற்றும் பண்பியல் ரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. இது பாதுகாப்பு சபையினதோ அல்லது மனித உரிமை பேரவையினதோ அனுமதியுடன் நியமிக்கப்படவில்லை.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் பக்கச்சார்பானவையாகும். இலங்கைக்கு பாதகமான வகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயணம் ஒன்றை நாங்கள் செல்ல ஆயத்தமாகும்போது இவ்வாறு எம்மை அசௌகரியப்படுத்த முயற்சிப்பது தொடர்பில் கவலையடைகின்றோம். எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். சர்வதேச ஊடங்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இது மகிழ்ச்சியான விடயமாக இருக்கலாம். நாங்கள் இந்த அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுப்பூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து புலிகள் இந்த நாட்டை பிரிப்பதற்கு முயற்சித்தனர். தற்போது அதனை வேறு வடிவத்தில் சர்வதேச மட்டத்தில் புலிகளும் புலம்பெயர் மக்களும் மேற்கொள்வதை காண முடிகின்றது. ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு குறித்து உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம்.

இராஜதந்திர ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். பேசிக்கொண்டிருப்பதைவிட இந்த விடயத்தை செயலில் காட்டுவோம். ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமை பேரவைக்கும் தெளிவுபடுத்துவோம். மேலும் இந்த அறிக்கை சமநிலையானது என்பதனை காட்டுவதற்காக புலிகளின் மீறல்களையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் புலிகளுக்கு இதில் சிறந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் நாங்கள் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றார்.

சரத் அமுனுகம அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிடுகையில் :

பான் கீ. மூன் இந்த அறிக்கையை ஒருபக்கச்சார்பாகவே வெளியிட்டுள்ளார். இதனை நாங்கள் கண்டிக்கின்றோம். அத்துடன் நிராகரிக்கின்றோம். இவ்வாறு விசாரணை ஒன்று நடத்த ஐ.நா. விடம் யார் கோரிக்கை விடுத்தது என்று கேள்வியெழுப்புகின்றோம். அதாவது நாடு ஒன்றில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படும். ஆனால் இலங்கையிலிருந்து அவ்விதத்தில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த நாட்டு மக்கள் மிக அண்மையில் மூன்று தடவைகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாரிய விதத்தில் அங்கீகரித்துள்ளனர்.

இதேவேளை எமது உள்ளக விடயங்களை ஆராய கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழு சிறப்பாக செயற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.“வின் குழுவானது எங்கிருந்து தகவல்களை பெற்றது என்று வினவுகின்றோம். எவ்விதமான ஆதாரங்களோ ஆவணங்களோ இன்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இலங்கை ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஆனால் அவ்வாறு உத்தியோகத்தர் ஒருவர் ஐ.நா. சட்டத்தின் பிரகக்ஷிரம் தகவல்களை வெளியிட முடியாது. நானும் ஐ.நா. வில் பணிபுரிந்துள்ளேன். ஐ.நா. உத்தியோகத்தர் என்ற வகையில் பெறும் தகவல்களை வெளியிட முடியாது என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்து வெளியிடுகையில் :

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கையை நாங்கள் எதிர்க்கின்றோம். நிராகரிக்கின்றோம். நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுக்களை அறிக்கையில் முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கவேண்டும். மாறாக பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. புலிகள் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாகும். இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரபாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று உறுப்பினர்கள் தொடர்பிலும் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களின் கடந்தகால வரலாறுகள் குறித்து எங்களுக்கு தெரியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதி வெளிவரவுள்ளது. அதற்கிடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடக்கு கிழக்கில் பல மடங்கு அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் நாங்கள் இவ்வாறு அபிவிருத்தியை நோக்கி செயற்படுகையில் ஜனாதிபதியை இலக்குவைத்து சில தரப்புக்கள் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகளை தோற்கடிக்க இராஜதந்திர முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு களங்கம் ஏற்பத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

அமைச்சர் டலஸ் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில் :

மீண்டும் உலகில் பாரிய யுத்தம் ஒன்று இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இந்த ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் 1945 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தசாப்தங்களாக பணிப்போரை சமாளிப்பதிலேயே ஐ.நா. காலத்தை கழித்தது. அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையினாலேயே தீர்க்க முடியும் என்றும் ஒரு கொள்கையை ஐ.நா. கொண்டுவந்தது. அது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் வந்தன. முரண்பாட்டு தீர்வு முரண்பாட்டு முகாமைத்துவம் என பாடத்திட்டங்கள் உருவெடுத்தன. இவ்வாறான காலகட்டத்தில் ஜனாதிபதி எமது நாட்டின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இந்த வெற்றியை ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இவ்வாறான விடயங்களை கொண்டுவருகின்றனர். செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை.

அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க தயாரில்லை. அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக