28 ஏப்ரல், 2011

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு இல்லை

நாட்டின் வடபகுதியில் சிவில் நிர்வாகம் செயலிழந்து அங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகிறதென்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு வட இலங்கையில் உள்ள அரச ஊழியர்களும், பொதுமக்களும் தங்கள் வன்மையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அரசாங்க நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் தினகரன் நிருபர் தொடர்பு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா? என்று வினவிய போது, இது அப்பட்டமான தவறான கருத்து என்றும், வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் எண்ணத்துடன், விஜித ஹேரத் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சொன்னார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்களா? என்று நாம் கேட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த யாழ் அரசாங்க அதிபர், இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தை சீரான முறையில் நடத்துவதற்கு தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை நல்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

இராணுவத்தினர் தன்னுடன் ஒன்றிணைந்து யாழ் மாவட்டத்தின் சகல அரச பணிகளுக்கும் உதவியையும், ஒத்துழைப்பையும் மனமுவந்து தருகிறார்கள். இராணுவத்தினர் எந்நேரமும் தங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று பாராட்டுத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் புதைக்கப்பட்டிருந்த தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் பொறியியல் பிரிவு செய்த உதவியை தம்மால் மறக்க முடியாது என்றும், அதனால் தனது நிர்வாகத்திற்கு அங்கு 17,000 குடிபெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது என்றும் கூறினார்.

இவ்விதம், எவ்வித பிரச்சினையுமின்றி அமைதியான முறையில் இந்த மக்களை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றிமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் மக்களை பாதுகாப்பான முறையில் மீள் குடியமர்த்த வேண்டுமென்று இவ்விரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் தற்போது ஒழுங்குகளை செய்து வருவதாகவும் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் இன்று வன்முறைகள், கொலை, குடும்பத்தகராறுகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக சில ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கள் யதார்த்த பூர்வமானவையல்ல. இது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாத்திரம் உரித்தான ஒரு பிரச்சினையல்ல என்றும், இது நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து வரும் சமூகப் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இத்தகைய குடும்பத் தகராறுகளை நல்ல ஆலோசனைகளின் மூலம் இல்லாமல் செய்வதற்கு சிவில் நிர்வாகம், இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் அறிவுறுத்தல் பயிற்சி பாசறைகளை நடத்துவதுடன் விளையாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் ஒழுங்கு செய்து வருவதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையை மேற்கொண்டுவரும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தொடர்ந்தும் அந்நாடுகளில் அகதி அந்தஸ்துடன் செல்வாக்குடன் வாழ வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் டயஸ்போரா என்று அழைக்கப்படும் இந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற போலிப் பிரசாரத்தை இனிமேலாவது நிறுத்திவிட்டு வடபகுதியில் உள்ள தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு அவர்கள் பொருளாதார ரீதியில் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் யாழ் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப்பிரிவு வடபகுதியில் மேற்கொண்ட தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்வின் ஆரம்ப நாள் வைபவத்தில் தன்னால் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தன்னை நியாயமற்ற முறையில் குற்றம் சுமத்தி கண்டித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தாம் பல வருடங்கள் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக இருந்த காரணத்தினால் அங்குள்ள இராஜ கோபுர திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமக்கு அவ் ஆலயத்தின் அரங்காவலர்கள் விடுத்த ‘8!ரிக்கையை ஏற்றுக்கொண்டு சென்றமையால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையென அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் அரச ஊழியர்களும், இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒரே அணியாக இணைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகளை நல்கி, அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றம், விவசாய அபிவிருத்தி உட்பட பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வருவதாகவும், இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் அநாவசியமாக தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை என்று யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வடபகுதியில் தற்போது பூரண சமாதானம் நிலவியுள்ளமையால் அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பான முறையில் தமது நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன், உல்லாச பிரயாணிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக