28 ஏப்ரல், 2011

விலை அதிகரிப்பு, வரி விதிப்பு மதுபானம், சிகரட் மூலம் ரூ. 17,000 கோடி வருமானம்




மதுபானம் மற்றும் சிகரட் என்பன மீதான விலைகள் அதிகரிக்கப்பட்டதாலும் வரி விதிக்கப்பட்டதன் மூலமும் கடந்த 10 வருட காலத்தில் 17,074 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டதாக பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, 2000 ஆம் ஆண்டில் 247 ரூபாவாக இருந்த வெளிநாட்டு மதுபான விலை 2011ல் 1003 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2003ல் 190 ரூபாவாக இருந்த வைன் 718 ரூபாவாகவும் 2000 ஆம் ஆண்டில் 213 ரூபாவாக இருந்த தென்னை மற்றும் பதப்படுத்திய மதுபானம் 213 ரூபாவில் இருந்து 863 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் 4.82 ரூபாவாக இருந்த 84 மி.மீ.க்கு அதிகமான சிகரெட் 2010 டிசம்பர் ஆகும் போது 15 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 84 மி.மீ. ரக சிகரெட் 4.30 ரூபாவில் இருந்து 12.10 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

கடந்த 10 வருட காலத்தில் மதுவரி மூலம் 1,62,108.90 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. சிகரெட் விலை அதிகரிப்பின் மூலமாக 9,635 மில்லியன் வருமானம் கிடைத்தது.

சிகரெட் மீது 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத சேதக் கட்டுமான வரியும் பெறப்படுவதோடு ஒரு கிராம் புகையிலைக்கு 10 ரூபா வரி அறவிடப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத தேசக்கட்டுமான வரியும் ஒரு வீத பொருளாதார சேவைக் கட்டணமும் அறவிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக