28 ஏப்ரல், 2011

தருஸ்மன் அறிக்கை சட்டரீதியானதல்ல ஒருதலைப்பட்சம் என சு.க நிராகரிப்பு






சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சட்ட ரீதியானது அல்ல. ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை. இதனை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கட்சி என்ற வகையில் தமது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடவோ, தயாரிப்பதற்கோ, சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது என கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, சரத் அமுனுகம, டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கும் நோக்குடன் மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.

இந்த குழு நியமிக்கப்படும் போதே அதனை இலங்கை அரசு எதிர்த்தது. இவ்வாறான ஒரு குழு நியமிப்பதற்கான அவசியம் இல்லை என்பதை ஆரம்பம் முதலே எமது அரசு வலியுறுத்தி வந்தது. இதுவே எமது அரசினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே குழு நியமிக்கப்படுகிறதே தவிர இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கல்ல என்பதையும் ஐ.நாடுகள் செயலாளர் நாயகமும் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த குழுவின் அறிக்கையை வெளியிடவோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவோ அவர்களுக்கு சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது. அவர்கள் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா. சபையின், ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அல்லது, வேறு அமைப்பின் அனுமதி பெறப்படாமலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருதலைப்பட்சமாக ஐ.நா. செயலாளரினால் எடுத்த முடிவுக்கமைய அமைக்கப்பட்ட குழு அத்துடன் ஒருதலைப்பட்சமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கையே இது என ஸ்ரீல. சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மிகவும், சுதந்திரமாக வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் சென்று விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையாக நடத்தப்படுகிறது.

இவ்வாறான விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படும் வரை அறிக்கையை வெளியிடவேண்டாம் என இந்த நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள், அமைப்புகள் பல வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் இவற்றை பொருட்படுத்தாமல் தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனை ஐ.நா. நிபுணர் குழு என ஊடகங்கள் தப்பான அர்த்தத்துடன் அழைக்கிறது. இது ஒன்றும் நிபுணர் குழு அல்ல. ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு மட்டுமே.

பொதுசன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த எம்.பி.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் உலக நாடுகள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கம்.

எனினும் அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்படுத்துவதுடன் பிளவை மேலும் மேலும் அதிகரிப்பதாக அமையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசு புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்துள்ளது. இன்னும் உலக நாடுகள் சில புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ளது. புலிகள் இயக்கம் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிரபாகரன் தான் குற்றவாளி என்பதையும் நிரூபித்தார்கள்.

இந்தியாவின் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எவரேனும் சவால் விடுத்தார்களா? இல்லை. உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு அமைப்பும் இது தவறு எனக் கூறவில்லை.

இவ்வாறான ஒரு புலிகள் அமைப்பை பரிசுத்தமானவர்கள் என காண்பிக்கப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும எம்.பி

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும், ஐ.நா. செயலாளருக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும் ஐ.நா. வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் வெளிக்காட்ட முனைகிறார்கள் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.

எனினும் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் ஐ.நா. செயலாளருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்றுள்ளமையின் ஊடாக அதன் கெளரவத்தை பேணுவோம். உறுப்புரிமை பெற்றுள்ளதை கெளரவமாகவும் கருதுகிறோம்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அமைப்பின் கருத்துக்களாக அர்த்தப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக