28 ஏப்ரல், 2011

ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது: டலஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தற்போதைய நிலைமையில் சர்வதேச நாடுகள் இலங்கையின் பக்கத்தில் நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலேக்ஷி அல்லது பான் கீ மூனுக்கும் எமக்கும் இடையிலோ எவ்விதமான தனிப்பட்ட பிரச்சினையுமில்லை. செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயற்பாட்டையே நாங்கள் எதிர்க்கின்றோம். அதாவது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருப்பதை நாங்கள் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகின்றோம்.

தற்போது இலங்கையை அசௌகரியப்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.“ இந்நிலையில் ஒரு விடயத்தை நினைவுபடுத்தவேண்டும். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் இந்த அறிக்கை சவால் விடுத்துள்ளது என்பதனை வலியுறுத்துகின்றோம். எனவே உலக நாடுகள் இந்த அறிக்கை விடயத்தில் தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது.

இந்த விடயத்தில் உலக நாடுகள் எமது பக்கமே இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நாங்கள் எமது கால்களில் எழுந்து நிற்க முயற்சிக்கையில் அதற்கு தடையாக இருக்கவேண்டாம் என்று கோருகின்றோம்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்ட ஏப்ரல் 24 ஆம் திகதி நாங்கள் முன்னாள் போராளிகள் 700 பேரை விடுவித்தோம். முன்னாள் போராளிகளின் சித்திரக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகியது. எனவே இந்த விடயத்தில் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக