மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக