இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற வகையிலான நீண்டகால வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றாடலின் பாதுகாப்பை தூரநோக்கில் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விளைவாகவே உலகம் இப்போது இயற்கை அனர்த்தங்க ளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினருடன் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறுகையில், மலையகப் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட ஏற்பாடுகளைச் சரியான முறையில் செயற்படுத்தாததன் விளைவாகவே மலையகப் பிரதேசங்களில் அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அத்தோடு சட்டவிரோத கட்டடங்களும் சட்டப்படி அனுமதி பெறாத இடங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நடவடிக்கையும் இங்கு இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.
அதனால் எதிர்காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களைக் கடுமையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதனை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுடையதாகும். தவறும் பட்சத்தில் ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சினைகளுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவே கருதப்படுவர்.
உலகம் முழுவதும் சுற்றாடலில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்காக உறுதியான, நீண்டகால தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படுவது அவசியம். இதற்காக விஞ்ஞானிகளினதும், பல்கலைக்கழகங்களினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
பூமியால் உறிஞ்சிக்கொள்ள முடியாதளவுக்கு நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் தான் மண்சரிவுகள் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் விஞ்ஞான பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான தீர்வுகளைத் தயாரிக்க வேண்டும். அதேநேரம், தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான நீர்ப்பாசன திட்டத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
நுவரெலிய மாவட்டத்தில் உடமாதுர, கும்பல்கம, தியனில்ல போன்ற பிரதேசங்களில் சுமார் 497 குடும்பங்கள் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் துரிதமாக நிவாரணம் வழங்குமாறும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீளக்குடி யேற்றப் பொருத்தமான இடங்களை இனம் காணுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சி.பி. ரட்நாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக