19 ஜனவரி, 2011

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு : விலை அதிகரிப்பை தவிர்க்க சூட்சுமமான நடவடிக்கை




உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்த போதும் உள்நாட்டு நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் விலையேற்றத்தை அதிகரிக்காமல் அரசாங்கத்தினால் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்த போதும் உள்நாட்டு சந்தையில் தற்போது இருக்கும் விலையிலேயே நுகர்வோருக்கு சந்தைப் படுத்த முடிந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிலியந்தலை போகுந்தர சந்தியில் புதிய எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சில சந்தர்ப்பங்களில் பரிசீலனை செய்யப்பட்டாலும் உள்நாட்டில் 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இன்று வரை விலை அதிகரிப்பு செய்யப்பட வில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக விலையேற்றம் செய்யப் படவில்லை. தற்போது நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வேளையில் வெளியார் சுமைகளை நுகர்வோர் மீது சுமத்தாமல் தேவையான நிவாரணங்களை பொது மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார்.

பெற்றோலிய வள கைத்தொழில் துறையில் இதுவரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சகல பிரதான நகரங்களிலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதோடு, பொருளாதார மத்திய நிலையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, முத்துராஜவெல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தரமுயர்த்துவதற்கும் கடந்த காலத்தில் மூடப்பட்ட விற்பனை நிலையங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிலியந்தலையில் தனியார் துறையினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையம் சகல தொழில்நுட்ப முறைக்கு ஏற்ப மூன்றரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள் ளது. இதற்கு பெற்றோலிய கூட்டுத் தாபனத்தால் எண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஏ.எச்.எம். பெளசி, காமினி லொக்குகே, டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக