19 ஜனவரி, 2011

மூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொண்டமான் கிழக்கு விரைவு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆடுகள், மாடுகள், கோழிகள் உட்பட 3 இலட்சத்து 55 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக நேற்று (18) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

231,000 கோழிகளும், 90,300 மாடுகளும், 32,400 ஆடுகளும் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக பண்ணை விலங்கு வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நேற்று பேராதனையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பேராதனையிலுள்ள பண்ணை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் அமைச்சர் தொண்டமான் பிராந்திய வைத்திய அதிகாரிகளுடன் அவரச கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் வெள்ளப்பெருக்கினால் பண்ணை விலங்கு உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பண்ணை உற்பத்தித்துறையினைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் இன்று (19) அவசர விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இதன் போது பண்ணையாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயவுள்ளார்.

கிழக்கில் அண்மையில் பெய்த அடை மழையினால் கோழிப்பண்ணைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 1,22,500 கோழிகளும் 63 ஆயிரம் மாடுகளும், 22,500 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு இலட்சம் கோழிகளும், 5400 ஆடுகளும், 15,100 மாடுகளும் உயி ரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெள்ளத்தினால் பாதிப்புற்று நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

50 யானைகள் உயிரிழந்ததாக வெளியான தகவலில் எந்த உண்மையும் கிடையாதென்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக