19 ஜனவரி, 2011

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பம்

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தலில் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்து வேட்பு மனுக்களை தயாரிப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகள் கூட்டணியமைத்து போட்டியிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாகவும் வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் 21 ஆம் திகதி முதல் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னணிட்டு நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி மனுக்களை தாக்கல் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து தேர்தல்கள் திணைக்களத்திற்கு தரவுகளை தொலைநகல் மற்றும் இணையத்தின் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பாளருக்கான விருப்பு இலக்கங்களை துரிதமாக வழங்கும் நோக்கிலேயே இவ்வாறான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி 06 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் செலுத்தியிருக்கவேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்களாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 267 சபைகளின் ஆட்சிகாலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்காலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கான தேர்தலும் இம்முறை நடைபெறவுள்ளது.

இதன்படி 301 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை மீதமாகவுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னர் இடம்பெறும் இவற்றுள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரணமாக ஒத்துவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் நாட்டிலுள்ள 18 மாநகரசபைகள் தேர்தலுக்காக கலைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக