மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபா மானியம் வழங்குகிறது. இதனாலே 19.14 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் 14.95 ரூபாவுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது.
மின் கட்டண உயர்வு 90 அலகுகளில் இருந்து 120 அலகுகளாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட 400 மில்லியன் நஷ்டத்தையும் திறைசேரியே வழங்குவதாகவும் மேற்படி ஆணைக்குழு கூறியது. மின் கட்டண உயர்வு குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த போதே இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உயரதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர். இது குறித்து ஆணைக்குழுத் தலைவர் ஜெயதிஸ்ஸ கொஸ்தா கூறியதாவது:-
2008 முதல் மின்கட்டணத்தில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்பொழுது கூட 120 அலகுகள் வரை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே போன்று சிறு, மத்திய கைத்தொழிலாளர்களின் மின் கட்டணங்களும் திருத்தப்படவில்லை.
பெரிய கைத்தொழிலாளர்கள், ஹோட்டல்கள் என்பவற்றின் கட்டணம் 8 வீதத்தினாலே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் ஹோட்டல்களுக்கு கூடதலான கட்டண உயர்வு மேற்கொள்ள சிபார்சு செய்யப்பட்டது.
கடந்த காலங்களின் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே மக்களின் கருத்து பெறப்படும். ஆனால் இம்முறை மக்களின் கருத்தைப் பெற்றே கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு ள்ளது. மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு முன்வைத்தோம்.
அதன்படி அரசாங்கம் கட்டண உயர்வு தொடர்பில் முடிவு செய்துள்ளது. பெரும்பாலான மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே 120 அலகுகளுக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 85 வீதமான மக்களின் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது.
இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கட்டண உயர்வுக்காக நியமிக்கப்பட்டதல்ல. கட்டணங்களை சீர்திருத்தவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் தமிக குமாரசிங்க கூறியதாவது:- தமது மின் கட்டண பட்டியல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என ஒவ்வொரு பாவனையாளரும் அறிந்து கொள்ள வேண்டும்.
பாவனையாளர்களிடம் இருந்து நியாயமான கட்டணம் அறவிடப்படுவதை உறுதி செய்யவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 மாதங்களுக்கே கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அடுத்த 6 மாத காலத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படல், எரிபொருள் விலை குறைவு, நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு என்பன இடம் பெற்றால் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆஸ்பத்திரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.
2015 இல் மின்சார சபை நஷ்டமின்றி இயங்கும் நிலை ஏற்படுத்துவது எமது நோக்கமாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக