30 டிசம்பர், 2010

அனர்த்தங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு


மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில்

இடம்பெறும் நிர்மாணப்பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பில்



மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் யாவும் அவ்வப்பகுதி உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தேசிய சபை அலரி மாளிகையில் கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மக்களுக்கு அறிவூட்டுவதற்கென ஒழுங்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

“காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக வானிலை அவதான நிலையம் மிகவும் விழிப்பாக செயற்படுவது அவசியம்" எனவும் ஜனாதிபதி அவர்கள் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தினார்.

அனர்த்தங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவது தொடர்பாகவும், திடீர் அனர்த்தங்களின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கும், வாகன சாரதிகளுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அறிவூட்டும் வேலைத்திட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். மரினா முஹம்மத் இக்கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் பாடவிதானங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்கையை ஒரு அம்சமாக சேர்த்துக்கொள்ளுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு ஆறு பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன உட்பட பல அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக