30 டிசம்பர், 2010

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு


5000 கோடி ரூபா அரசுக்கு மேலதிக செலவு

தொழில் அதிகாரி - ரூ. 4000 வரை

வைத்திய அதிகாரி - ரூ. 5600 வரை

பல்கலை விரிவுரையாளர் - ரூ. 21000 வரை

அலுவலக உதவியாளர் - ரூ. 2500 வரை

கிராம உத்தியோகத்தர் - ரூ. 3000 வரை

முகாமைத்துவ உதவியாளர் - ரூ. 3050 வரை

வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வின்படி அலுவலக உதவியாளர் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் வரையில் 2,500 முதல் 21,000 ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. இதற்கென 5,000 கோடி ரூபாவை அரசாங்கம் மேலதிகமாக செலவிடவுள்ளது என சம்பள மற்றும் ஊழியர் ஆணைக்குழு வின் இணைத் தலைவர் எம். என். ஜுனைத் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் ஊடாக 13 இலட்சம் அரச ஊழியர்கள் நன்மையடையவுள்ளனர். சுமார் 4 1/2 இலட்சம் ஓய்வூதியக்காரர் களுக்கும் நன்மை கிடைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்புகள் ஜனவரி மாதம் முதல் அமுலாகிறது. 6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு ஜுலை மாதம் முதல் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளரின் அடிப்படை சம்பள படி வரிசையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 1,300 ரூபாவினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும். அந்த சம்பள படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ள ஊழியரின் சம்பளம் 3050 ரூபாவினால் அதிகரிக்கும்.

தொழில் அதிகாரி முதல் சம்பள படி வரிசையில் உள்ளவரின் சம்பளம் 1450 ரூபாவினாலும் உச்ச மட்டத்தில் இருப்பவரின் சம்பளம் 4000 ரூபாவினாலும் அதிகரிக்கும்.

அரசாங்க சேவை அதியுயர் தரத்தின் ஆரம்ப சம்பள படி வரிசையில் உள்ள ஒருவரின் சம்பளம் 1620 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ளவரின் சம்பளம் 4,700 ரூபாவினால் அதிகரிக்கும்.

அரசாங்க சேவையில் தொழில் சார் பிரிவின் கடமைகளின் சிறப்பம்சங்களை முறையாக நடத்திச் செல்லப்படுவதை ஊக்குவிப்பது அத்தியாவசியமானது என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் ஆய்வு நிறுவனங்களிலும் உள்ள உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நீதி மற்றும் விசேடத்துவ முகாமைத்துவ துறைகளில் உள்ளவர்களின் சம்பள அதிகரிப்பு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதை ஜுனைத் சுட்டிக்காட்டுகிறார்.

அரசாங்க சேவையில் நாடு முழுவதும் பணியாற்றும் ஒருவரின் சம்பளம் 1,750 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த தரத்தில் உச்ச சம்பள படி வரிசையில் இருப்பரின் சம்பளம் 3,300 ரூபாவினால் அதிகரிக்கும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் சம்பளம் 12,720 ரூபாவில் இருந்து 21,000 ரூபா என்ற ரீதியில் அதிகரிக்கும். இவ்வாறு எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்துக்கு 5,000 கோடி ரூபாவை மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளது.

13 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் நன்மையடைவார்கள்.

தற்போது 5,250 ரூபா என்ற மட்டத்தில் உள்ள உத்தியோக ரீதியில் இல்லாத அசாங்க மற்றும் பாதுகாப்பு படைகளில் சேவையாற்றுவோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 5,850 ரூபாவுடனான கொடுப்பனவை அவர்கள் பெறலாம். இதேவேளை நிறைவேற்று தரத்துக்குரிய ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வருடம் ஜுலை மாதம் முதல் வழங்கப்படும்.

இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 300 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. அதற்கேற்ப 2,375 ரூபாவாக உள்ள கொடுப்பனவு 2,675 ரூபாவாக அதிகரிக்கும்.

ஓய்வூதிய சம்பளத்தில் இடம்பெறும் முரண்பாடுகளை நீக்குவதற்காக 2003க்கு முன்னர் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு மாதாந்தம் 750 ரூபாவினாலும் 2003 க்கும் 2006ம் இடையே ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு 250 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் யோசனையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பின் மூலம் ஓய்வூதியம் பெறும் நான்கரை லட்சம் பேர் நன்மையடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக