4 நவம்பர், 2010

போர்க் குற்றங்களுடன் தொடர்பு: இலங்கை அகதி கனடாவில் கைது

போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கைத் தமிழ் அகதியொருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து எம். வி. சன் சி கப்பல் மூலம் கனடாவின் வன்கூவர் நகரிற்கு சென்ற 492 இலங்கை அகதிகளில் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

தடுப்புமுகாமில் தற்போது வாழ்ந்துவரும் இவர் மீதான போர் குற்றங்கள் நீருபிக்கப்படுமாயின் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார்.

கனேடிய குடியியல் சட்டங்களுக்கமைய நபரொருவர் தீவிரவாத நடவடிக்கைகள் அல்லது போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவராக இனங்காணப்படின் அவருக்கு கனடாவில் அனுமதியளிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாகக் கருத்துக்கூற கனேடிய எல்லை பாதுகாப்புப் பிரிவு மறுத்துவிட்டது.

எனினும் இது தொடர்பாக கருத்துதெரிவித்த கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கனடாவின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்தி அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

எம்.வி. சன் சி கப்பல் மூலம் தாய்லாந்திலிருந்து கனடாவிற்கு வருவதற்காக ஒவ்வொரு தமிழரும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டொலர்கள் வரை செலுத்தியிருக்கின்றனர்.

இத்தகைய ஆட்கடத்தல் சம்பவங்களை தடைசெய்யும் பொருட்டு கனேடிய அரசு கூடிய புதிய சட்டமொன்றினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இதன் பிரகாரம் கடத்தல்காரல்களுக்கு நீண்டகால சிறை , நாடுகடத்தப்படல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளன.

மேலும் இச்சட்டத்திற்கு அமைய நாட்டுக்குள் கடத்தப்படுபவர்களின் உண்மையான அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படும்வரை சுமார் 1 வருடகாலம் வரை தடுத்துவைக்கப்படுவர்.

கனடாவில் புகலிடம் தொடர்பான 80 அயிரம் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதுடன் ஒவ்வொரு அகதிக்கும் வருடாந்தம் 30 ஆயிரம் டொலர்கள் செலவிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக