கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் லக் சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் ஊடாகத் தேங்காயை ரூபா 25.00 படி நேற்று முதல் சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் கூடிய உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான கமிட்டியின் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேங்காயின் சில்லறை விலை சந்தையில் அசாதாரணமான முறையில் அதிகரித்துச் செல்லுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் மேம்பாட்டு அமைச்சு அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட கம்பனியி டமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பங்களிப்புடன் தேங்காயை நேரடியாகக் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துவதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலத்தின் நிமித்தம் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையை சந்தையில் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது. இவ்வரிச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எதிர்வரும் நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை 6000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு அரிசி அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளது. சந்தையில் அரிசி விலை உயரும் சாத்தியம் ஏதாவது தென்பட்டால் உடனடியாக அரசின் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைக்கு விடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத்தின் போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அதேநேரம், அரிசி தயாரிப்பு தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு வழங்கியுள்ள வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்
இதேவேளை, மரக்கறி விலை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “மரக்கறி விலைகளை நிர்ணயிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் இடைத்தரகர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அத்தோடு மரக்கறி விலைகளை ஏற்றி இறக்கும் போக்குவரத்து நடவடிக்கையின் போது அவற்றைப் பாதுகாப்பாகப் பொதி செய்வதைக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான யோசனையை துரித கதியில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சருக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது அறிவுரை வழங்கினார்.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் பணவீக்கம் கட்டம், கட்டமாகக் குறைவடைந்து அதனை இப்போது 6 சதவீதமாகப் பேண அரசினால் முடிந்துள்ளது.
உணவு உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதற்காக அரச வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தும் போது, அரச காணிகளையும், ஏனைய வளங்களையும் முறையாக முகாமை செய்து பயன்படுத்துமாறும், எந்த உணவு உற்பத்திக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதை இனம் கண்டு செயற்படும் போது அதிக பலாபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது கூறியுள்ளார்.
இக் கூட்டத்தில் அமைச்சர்களான ரத்னசிறி விக்கிரமநாயக்கா, ஆறுமுகன் தொண்டமான், மஹிந்த சமரசிங்க, டொக்டர் ராஜித சேனாரட்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே, பிரதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக