4 நவம்பர், 2010

மேல்கொத்மலை நீர்மின்திட்ட சுரங்கப் பாதை இன்று திறப்பு அமுல்படுத்தினால் அலகுக்கு ரூ. 5 அடிப்படையில் மின் விநியோகம்


மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தை அமுல்படுத்தும் பட்சத்தில் ஒரு அலகுக்கு ஐந்து ரூபா என்ற அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்க முடியும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

இதன் மூலம், வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபா எஞ்சுவதாக தெரிவித்த அவர், 1985ம் ஆண்டு திட்டமிட்ட படியே இந்த திட்டத்தை ஆரம்பித்திருந்தால் சுமார் 200 பில்லியன் ரூபாவை மீதப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் கொத்மலை நீர்மின் நிலையத்திற்கு நீரை எடுத்துவரும் பிரதான சுரங்கப் பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று 4ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட வுள்ளது.

மேல் கொத்மலை நீர் மின் திட்டம் மற்றும் பிரதான சுரங்கப் பாதை ஆரம்ப வைபவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

சுமார் நான்கு தசாப்தங்களாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சுமார் மூன்று ஆண்டு காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்துள்ளது.

44 பில்லியன் ரூபா செலவில் இந்த பாரிய நீர்மின்திட்டம் விநியோக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென இலங்கை அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜப்பான் அரசாங்கம் 34 பில்லியன் ரூபாவை கடனாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

ந்த நீர் மின் நிலையத்திற்கு நீரை எடுத்து வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள 12.9 கிலோ மீட்டர் நீளமான இந்த பிரதான சுரங்கப்பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து அதன் நிர்மாண பணிகளை பார்வையிடவுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நீர் மின் திட்டம் விநியோகிக்கப்படவுள்ளதால் சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரப்புவதற்கு முன்னர் பொது மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை 5ம் திகதி முதல் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையிட முடியும் என்றார். இதற்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இது ஒரு நெடுஞ்சாலை அல்ல, சுரங்கப் பாதை என்பதை கருத்திற் கொண்டு பார்வையிட வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

150 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேற்படி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாண பணிகள் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

2006ம் ஆண்டு ஆரம்பமான மேல் கொத்மலை மின் நிலைய பணிகள் ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

தற்பொழுது எரிபொருள் மூலமே மின் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சர் ஒரு அலகுக்கு தற்பொழுது 17/50 சதம் செலவாகுவதாக குறிப்பிட்டார். இந்நிலையில் நீர் மின் திட்டத்தினை அமுல்படுத்தும் பட்சத்தில் ஒரு அலகுக்கு ஐந்து ரூபாவே செலவாகுவதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய நன்மைகளை இந்த நாட்டு மக்கள் அடையவுள்ளனர் என்று தெரிவித்தார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பேர்டினன்டோ, இலங்கை மின்சார சபைத் தலைவர் வித்யா அமரபால, ஆரிய ரூபசிங்க ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக