5 அக்டோபர், 2010

திருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!


திருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் தாழமுக்கம் உருவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாக இடைப்பருவ பெயர்ச்சி மழைக்காலநிலை உருவாக்கம் தாமதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையின் ஊடாக காற்று வீசும் திசை திடீரென மாற்றமடைந்திருப்பதாகவும், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிக்குடாவில் நேற்று முன் தினம் தாழமுக்கம் உருவாகியுள்ளது.

இதனால் இலங்கை ஊடாக வீசிய காற்றின் திசை தற்போது திடீரென மாற்றமடைந்துள்ளது. தற்போது மேல் மற்றும் வடமேல் திசைகளின் ஊடாக வீசும் காற்று மணித்தியாலத்திற்கு 5-10 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக மேல், தென் கடற் பரப்புக்கள் கொந்தளிக்க முடியும். இக் கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியா லத்திற்கு 50-60 கிலோ மீட்டர்கள் வரை காணப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக