5 அக்டோபர், 2010

பொன்சேகாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோருவேன்: ரணில்

முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரும் அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. அதனை இன்று அல்லது நாளை செய்வேன். எனவே ஜனாதிபதி பௌத்த பீடாதிபதிகளிடம் உறுதியளித்தவாறு பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத்பொன்சேகா எம்.பி இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 30 மாதங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்..

இவரை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு ஏற்பாடாகியுள்ள சமய நிகழ்வுகள் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூகொடை நிக்கவல போதிமலு விகாரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

இங்கு அவர் மேலும் கூறுகையில், பொலன்னறுவையில் இடம்பெற்ற வடமேல் மாகாணத்தின் பௌத்த மதத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சிறைத் தண்டனை தொடர்பில் முறைப்படி விண்ணப்பித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரது விடுதலை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்..

இதேபோல் பௌத்த பீடாதிபதிகளுக்கும் உறுதியளித்துள்ளார். எனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டுக்காகவும் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும் சரத்பொன்சேகா எம்.பி.யை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோருவதற்கு தீர்மானித்திருக்கின்றேன். ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம் இவ்வாறு கோருவதற்கு எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு உரிமை இருக்கின்றது. சரத்பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவருக்காக குரல் கொடுப்பதற்கான அதிகாரமும் எனக்கு இருக்கின்றது..

முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சரத்பொன்சேகா சாதாரண குடிமகனாவார். அவ்வாறான சாதாரண குடிமகனை பொன்சேகா மீதே இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. எனவே அவரை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றேன்..

பௌத்த பீடத்துக்கு அளித்த வாக்குறுதியின் படி அதனை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றேன். இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கையை இன்று அல்லது நாளைய தினத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருக்கிறேன். அவரை விடுதலை செய்யும் வரையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரச எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எமது இந்த போராட்டத்தில் சகல மக்களும் அமைப்புக்களும் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக