5 அக்டோபர், 2010

உள்ளூராட்சி திருத்த சட்டமூலத்தை இம்மாதம் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை

உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எப்போது சமர்ப்பிப்பது மற்றும் எத்தனை நாட்கள் அது தொடர்பில் விவாதம் நடத்துவது என்பது தொடர்பில் ஏற்கனவே கட்சி தலைவர்களிடையே ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அந்த வகையில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதி முறைமையில் உறுப்பினர்களை தெரிவு செய்யவும் ஒரு பகுதி விகிதாசார முறைமையில் உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யும் வகையிலும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை திருத்தங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை என்று ஏற்கனவே அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அதாவது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சிமன்ற திருத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அதற்கு மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக