5 அக்டோபர், 2010

வெளிநாடுகளில் செயல்படும் புலிகள் நெட்வொர்க் : இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தகவல்


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 17 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெளிநாடுகளில் அந்த அமைப்பின், "நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது' என, இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு சார்பில் மறு ஆய்வு ஆணையம் அமைக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரும், பேராசிரியருமான ரோகன் குணரத்னே, இந்த ஆணையத்தின் முன், ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை ராணுவத்தால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. இருந்தாலும், அந்த அமைப்பின் சர்வதேச "நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நெட்ஒர்க்கை ஒழிப்பதற்கு அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பினரின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. புலிகள் அமைப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்து நடக்கின்றன. அறக்கட்டளை என்ற பெயரில் இவர்கள் செயல்படுகின்றனர்.

புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட போரின் போது, சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 7,000 பேர் கொல்லப்பட்டதாக, சர்வதேச மீடியா பிரசாரம் செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, அங்குள்ள டாக்டர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியதில், 1,400க்கும் குறைவானவர்களே இறந்தனர் என்பது தெரியவந்தது. இவ்வாறு ரோகன் குணரத்னே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக