5 அக்டோபர், 2010

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது அத்துமீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை; கிழக்கு அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி






சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ஏ. எல்.எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ரி. ஹஸனலி, படுர்சேகுதாவூத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராயவென குழுவொன்றை நியமிக்க விருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் இது மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அநீதி இழைக்கப் படமாட்டாது. சிறு சிறு பிரச்சினைகளை எவரும் இன ரீதியாகப் பார்க்கக்கூடாது.

ழக்கு மாகாணம் பல வருடங்களுக்குப் பின் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. சகல பேதங்களையும் மறந்து, அரசியல் வாதிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகலரும் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம்.

மொழிப் பிரச்சினைகள் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவுகின்றன. அதற்குத் தீர்வு காணும் வகையில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங் கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அதிகாரியையும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மேலதிகமாக சிங்கள அதிகாரியையும் நியமிக்கத் தீர் மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதியை செலவிட்டு அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக