23 ஜூலை, 2010

புழல் பெண்கள் ஜெயிலில் பூவரசி மீது சாப்பாட்டு தட்டை வீசி எறிந்த பெண் கைதிகள்; “கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்” என்று கதறி அழுதார்

புழல் பெண்கள் ஜெயிலில்    பூவரசி மீது சாப்பாட்டு தட்டை    வீசி எறிந்த பெண் கைதிகள்;    “கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்” என்று கதறி அழுதார்
சிறுவன் ஆதித்யாவை கொலை செய்த பூவரசியை போலீசார் நேற்று இரவு ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாந்தினி வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் பூவரசியை இரவு 9.30 மணிக்கு புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இரவில் மற்ற பெண் கைதிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பூவரசியை யாரும் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. இன்று காலை புழல் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மற்ற பெண் கைதிகளுடன் பூவரசியும் உணவு வாங்க கையில் தட்டுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மற்ற பெண் கைதிகள் சிறுவன் ஆதித்யாவை கொன்ற பூவரசி அவள் தான் என்று அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் பெண் கைதிகள் பூவரசியை ஆவேசமாக திட்டித்தீர்த்தனர்.

ஆவேசத்தின் உச்சிக்கு சென்ற சில பெண் கைதிகள் கையில் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை தூக்கி பூவரசி மீது வீசி எறிந்தார்கள்.

உடனே பெண் சிறை அதிகாரிகள் பூவரசியை பத்திரமாக அங்கிருந்து அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டிபன் வாங்கி கொடுத்தனர். அறையில் வைத்தே பூவரசி காலை உணவை சாப்பிட்டார்.

பின்னர் ஜெயிலில் உள்ள டாக்டர்களிடம் பூவரசியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த போது பூவரசி தேம்பி தேம்பி அழுதார். அவரை ஜெயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். அப்போது பூவரசி கண்ணீர் மல்க கூறியதாவது:-

நான் சிறுவன் ஆதித்யாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை. ஏதோ என்னை அறியாமல் ஆத்திரத்தில் ஜெயக்குமார் மீது இருந்த வெறியில் கொலை செய்து விட்டேன். ஜெயக்குமார் என் கருவை அழித்தார். அதற்காக அவரது குழந்தையை கொல்ல வேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது.

ஆதித்யாவை கொலை செய்த போது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். வெறி அடங்கும் முன்பு அவனை கொலை செய்து விட்டேன். கொலை செய்த போது என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. நான் சுயநினைவிலும் இல்லை. ஆதித்யாவை கொலை செய்த பிறகு தான் நான் நினைவுக்கு வந்தேன். தவறு செய்து விட்டோமே என்று கதறி துடித்து அழுதேன்.

பின்னர் பாரிமுனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பாவமன்னிப்பு கேட்டேன். ஆனாலும் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார்.

இந்த கொடூர செயலை நான் தான் செய்தேனா என்பதை நினைத்து பார்க்கும் போது பதற்றமாக உள்ளது. எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பூவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் ஜெயில் அறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக