23 ஜூலை, 2010

ராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள ராணுவம் நடத்திய வெறித்தாக்குதலில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.

வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தமிழர்களில் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பு முகாம்களில் இன்னமும் அடைப்பட்டு கிடக்கும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் யாரும் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர்.

இறுதிப் போர் நடந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் உள்பட பலர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்திடம் பிடிபட்ட பாலகுமரன், யோகி ஆகியோரும் துடிக்க, துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிருடன் பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடு தலைப்புலிகளும் கண்களை கட்டி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை சில மாதங்களுக்கு முன்பு இணையத் தளத்தில் வெளியான காட்சிகள் அம்பலப்படுத்தின. உலகத் தமிழர்களை இந்த காட்சிகள் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து ராஜபக்சே அரசு மீது போர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. உலகின் பல நாடுகள் இதை கண்டித்தன. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஈழத்தமிழர்கள் கோரிக்கையை ஏற்று போர் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த குழு ஒன்றை ஐ.நா. அமைத்தது. சீனா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் துணையுடன் இந்த விசாரணையை ராஜபக்சே எதிர்த்தார்.

என்றாலும் ஐ.நா.சபை, போர் குற்றச்சாட்டு விசாரணையை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. நியூயார்க் நகரில் நேற்று ஐ.நா.நிபுணர் குழுவின் விசாரணை தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐ.நா.மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இடம் பெற உலகப்புகழ் பெற்ற வக்கீல் லூயிஸ் மொரீனோ அக்கம்போ விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் கறுப்பு இன பழங்குடிகளை கொன்ற அதிபர் அல்பஷீர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தவர்.

அல்பஷீரை கைது செய்ய உத்தரவிடும் அளவுக்கு திறமையாக வாதாடினார். அது போல ராஜபக்சேக்கு எதிராகவும் வாதாட தயார் என்று அக்கம்போ அறி வித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐ.நா.சபை கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தவறுகளை என்னால் வெளியில் கொண்டு வர முடியும். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார். இவரை ஐ.நா. மனித உரிமை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உலகத்தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக